தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

எட்டுப் பேரை திருமணம் செய்து நகை, பணத்தை ஏமாற்றியதாக நம்பப்படுபவர்

2 mins read
f857838b-f127-4914-bd5a-6df688466bd7
எண்மரை ஏமாற்றியதாக நம்பப்படும் ரஷீதா - படம்: இந்திய ஊடகம்

ஓமலூர்: எட்டுப் பேரை திருமணம் செய்து அவர்களிடமிருந்து பணம், நகையை ஏமாற்றியதாக நம்பப்படும் ரஷீதா என்ற பெண்ணைக் காவல் துறையினர் தேடிவருகின்றனர்.

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள எம்செட்டிபட்டியை சேர்ந்த 30 வயது மூர்த்தி நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். அவர், இன்ஸ்டாகிராமில் ரஷீதா என்ற பெண்ணிடம் நட்பாகப் பழகியுள்ளார்.

காதல் மலர்ந்து கடந்த மார்ச் மாதம் 30ஆம் தேதி இருவரும் ஓமலூர் ஈஸ்வரன் கோவிலில் திருமணம் செய்துகொண்டனர். ரஷீதாவுடன் பழகியதும் மூர்த்தி தனது மனைவியை விவாகரத்து செய்துள்ளார். மேலும் பணத்தை அவருக்கு வாரி வழங்கி உள்ளார்.

திருமணமான சில நாட்களிலேயே மூர்த்திக்கும், ரஷீதாவிற்கும் இடையே பல கருத்து மோதல்கள் ஏற்பட்டுள்ளன.

இந்த நிலையில் ரஷீதா கடந்த 4ஆம் தேதி ஓமலூர் அருகே உள்ள எம் செட்டியப்பட்டியில் உள்ள மூர்த்தி வீட்டில் இருந்து மாயமானதாகவும், காலையில் வீட்டில் தேடிப் பார்த்தபோது ரூ.1.5 லட்சம் பணம் மற்றும் 5 சவரன் நகையும் மாயமாகி இருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து மூர்த்தி தொளசம்பட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். காவல்துறையினர் ரஷீதாவின் சமூக வலைத்தளப் பக்கங்களை ஆய்வு செய்ததில், அவர் பற்றிய திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.

இந்த சம்பவம் குறித்து விசாரித்தபோது ரஷீதா நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியை சேர்ந்தவர் என்பதும் அவர் இதற்கு முன்னர் கேரளா, கர்நாடக, ஆந்திரா மாநிலங்களில் உள்ள 8 பேரை திருமணம் செய்து நகை மற்றும் பணத்தை திருடிச் சென்றுள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரஷீதா மீது கோவை மாவட்ட துடியலூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளதும் தெரியவந்துள்ளது.  காவல்துறையினர் தற்போது தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

“புகார் கொடுத்த வாலிபர் முன்னுக்குப் பின் முரணாக பேசுகிறார். அவரது அக்கம் பக்கத்து வீட்டில் இருப்பவர்களை விசாரித்தபோது அது போன்று எந்த ஒரு பெண்ணும் வந்து இங்கு தங்கவில்லை என கூறியுள்ளனர். முழுமையாக விசாரித்து தான் வழக்குப் பதிவு செய்வோம். புகார் கொடுத்ததற்கான ரசீது மட்டும் கொடுக்கப்பட்டு உள்ளது. இதுவரை எப்ஐஆர் பதிவு செய்யவில்லை,” என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்