நெக்ஸ்ட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து மருத்துவக் கல்லூரி மாணவர்கள் போராட்டம்

நெக்ஸ்ட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து மருத்துவக் கல்லூரி மாணவர்கள் போராட்டம்

1 mins read
bbb621fe-4b26-4efd-9db5-672d2fd93db5
போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள். - படம்: தமிழக ஊடகம்

சென்னை: மருத்துவக் கல்விக்கான ‘நெக்ஸ்ட்’ தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது இத்தகைய தேர்வு முறையால் மாணவர்களுக்குப் பெரும் பாதிப்பு ஏற்படும் என அவர்கள் தெரிவித்தனர்.

எம்பிபிஎஸ் மருத்துவப் படிப்பின் இறுதியாண்டு தேர்வு, முதுநிலை படிப்புகளுக்கான நீட் தேர்வு, வெளி நாடுகளில் மருத்துவம் படித்தவர்களுக்கான தகுதித் தேர்வு ஆகியவற்றை ஒருங்கிணைத்து ‘நெக்ஸ்ட்’ என்ற தேர்வு நடத்தப்படுகிறது.

நாடு தழுவிய அளவில் தகுதித் தேர்வை நடத்த தேசிய மருத்துவ ஆணையம் திட்டமிட்டுள்ளது.

எனினும் இதற்கு மாணவர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

“எம்பிபிஎஸ் இறுதியாண்டு மாணவர்கள் ‘நெக்ஸ்ட்’ தேர்வில் தேர்ச்சி பெற்றால்தான் பயிற்சி மருத்துவராகப் பணியாற்ற முடியும்.

“அதன்பின், நெக்ஸ்ட்-2 தேர்வில் தேர்ச்சி பெற்றால்தான் முதுநிலை மருத்துவ படிப்புகளில் சேர முடியும்,” என்று போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் சுட்டிக்காட்டினர்.

மருத்துவச் சேவையாற்றுவதற்கும் வெளிநாடுகளில் மருத்துவம் படித்தவர்களுக்கும் இத்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

‘நெக்ஸ்ட்’ தேர்வை திரும்பப் பெற வலியுறுத்தி, சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி வளாகத்தில் இளநிலை, முதுநிலை மருத்துவ மாணவர்கள் 200க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, ‘நெக்ஸ்ட்’தேர்வை திரும்பப் பெற வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

குறிப்புச் சொற்கள்