சென்னை: அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் எதிர்வரும் 26ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதற்கான உத்தரவை சென்று முதன்மை அமர்வு நீதிமன்றம் புதன்கிழமை பிறப்பித்தது. அவரது நீதிமன்ற காவல் இரண்டாவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தொடர்பாக அமலாக்கத் துறை அதிகாரிகள் செந்தில் பாலாஜியை கடந்த மாதம் 14ஆம் தேதி கைது செய்தனர்.
அப்போது நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து அவர் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதன் காரணமாக நீதிமன்றம் அனுமதி அளித்தபோதும் அவரிடம் விசாரணை நடத்த முடியவில்லை.
இந்நிலையில், அவரது நீதிமன்ற காவல் ஜூலை 12ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இதையடுத்து செந்தில் பாலாஜி தொடர்பான வழக்கை விசாரித்து வரும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அவரது நீதிமன்ற காவலை வருகிற 26ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.
செந்தில் பாலாஜியின் மனைவி தாக்கல் செய்துள்ள ஆட்கொணர்வு மனு மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடந்துவரும் நிலையில் முதன்மை நீதிமன்றம் நீதிமன்ற காவலை நீட்டித்துள்ளது.
தமது கணவரை கைது செய்தபோது அமலாக்கத்துறையினர் உரிய சட்ட விதிமுறைகளைப் பின்பற்றவில்லை என்று குறிப்பிட்டு செந்தில் பாலாஜியின் மனைவி உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
அதன் மீதான விசாரணையின்போது அமலாக்கத்துறை சார்பில் முன்னிலையான வழக்கறிஞர், அதிகாரிகள் மேற்கொள்ளும் விசாரணை நடவடிக்கைகளுக்கு தடை ஏற்படுத்தக்கூடாது என்றார்.
தொடர்புடைய செய்திகள்
செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதித்தும் ஏன் நடவடிக்கை எடுக்க நீதிபதி எழுப்பிய கேள்விக்கு, உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் செந்தில் பாலாஜியின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அதற்கு அமலாக்கத்துறை பொறுப்பேற்க வேண்டிய நிலை ஏற்பட்டுவிடும் என்றார் அதன் வழக்கறிஞர்.
இதையடுத்து, அமைச்சர் செந்தில் பாலாஜி மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை ஜுலை 14ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

