தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஆற்று நீர் கடலில் வீணாவதைத் தடுக்க புதிய நீர்த்தேக்கங்கள் அமைக்க ஆய்வு

2 mins read
e4ad0c74-209e-4ed7-bd78-deeccf782ebe
கொசஸ்தலை ஆற்றில் நான்கு இடங்களில் நீர்த்தேக்கங்கள் அமைப்பது குறித்த ஆய்வை விரைவில் முடிக்க தமிழ் நாடு அரசு திட்டமிட்டுள்ளது. - படம்: ஊடகம்

சென்னை: வடகிழக்குப் பருவமழை காலங்களில், ஆந்திரா, ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டப் பகுதிகளில் உள்ள லவ, குச மற்றும் நந்தியாறு, கல்லாறு உள்ளிட்ட ஆறுகள் மற்றும் கேசாவரம் ஏரி உள்ளிட்ட ஏரிகள் நிரம்பி, கொசஸ்தலை ஆற்றில் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடுகிறது.

அவ்வாறு பெருக்கெடுத்து ஓடும் நீரால் பூண்டி நீர்த்தேக்கமும் நிரம்பி உபரி நீர், கொசஸ்தலை ஆற்றில் வெளியேறி பயனின்றி சென்னை, எண்ணூர், வங்காள விரிகுடா கடலில் கலக்கிறது. அதைத் தவிர்க்கும் வகையில், கொசஸ்தலை ஆற்றில் நான்கு இடங்களில் நீர்த்தேக்கங்கள் அமைப்பது குறித்த ஆய்வை மேற்கொள்ள ரூ.5.6 கோடியை தமிழ் நாடு அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் நீர்த்தேக்கங்களில் முதன்மையானதாக விளங்கும் பூண்டி நீர்த் தேக்கத்தின் மேல் பகுதி மற்றும் கீழ் பகுதிகளில் 4 இடங்களில் நீர்த்தேக்கங்களை அமைப்பதற்கான ஆய்வுப் பணி தற்போது தொடங்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வுப் பணி 6 மாதங்களில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆய்வின் முடிவில் நீர்த்தேக்கங்கள் அமைப்பதற்கான சாத்தியக் கூறுகள் இருப்பது உறுதியானால், ஆற்றின் கரைகள் உயர்த்தப்பட்டு நீர்த்தேக்கங்கள் அமைக்கும் பணி தொடங்கும் என்று தமிழ் நாடு அரசு தெரிவித்துள்ளது.

சுமார் இரண்டு டிஎம்சி அளவு நீரைத் தேக்கி வைக்கும் அளவுக்கு நான்கு நீர்த்தேக்கங்கள் அமைக்கப்பட்டால், வெள்ள நீர் வீணாவது தடுக்கப்படுவதோடு, நீர்த்தேக்கங்கள் அமைந்துள்ள பகுதிகள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயரும் என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

குறிப்புச் சொற்கள்