தென்காசி: தென்காசி தொகுதியில் நடைபெற்ற தபால் வாக்குகளை எண்ணும் பணி திடீரென நிறுத்தப்பட்டது.
அதிமுக வேட்பாளர் செல்வ மோகன் தாஸ் பாண்டியன் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டதாக ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.
கடந்த 2012ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட பழனி நாடார், 370 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
தேர்தல் முடிவுகளை எதிர்த்து, அதிமுக வேட்பாளர் நீதிமன்றத்தை அணுகினார். தபால் வாக்குகள் முறையாக எண்ணப்படவில்லை என்று அவர் முன்வைத்த வாதத்தை ஏற்றுக்கொண்ட உயர் நீதிமன்றம், மறு வாக்கு எண்ணிக்கைக்கு உத்தரவிட்டது.
அதன்படி, வியாழக்கிழமை நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையின்போது செல்லாத வாக்குகள் தொடர்பாக அதிமுக வேட்பாளர் சில சந்தேகங்களை எழுப்பினார். இரு முறை வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டது. நேற்று மாலை நிலவரப்படி, மறு வாக்கு எண்ணிக்கை குறித்து மேலதிக தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.

