தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘சந்திரயான் 3’ திட்டத்துக்கு பங்களித்த தமிழக விஞ்ஞானி வீர முத்துவேல்

2 mins read
606ae14d-58fc-4650-a5e4-ba7331ab0986
விஞ்ஞானி வீர முத்துவேல். - படம்: ஊடகம்

சென்னை: ‘சந்திரயான் 3’ திட்டத்தில் தமிழரான திரு வீர முத்துவேல் முக்கியப் பங்காற்றி உள்ளார்.

இந்திய விண்வெளிக் கழகத்தின் கனவுத் திட்டங்களில் ஒன்றாக சந்திரயான் 3 கருதப்படுகிறது. இதற்கான திட்ட இயக்குநராக தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த விஞ்ஞானி வீர முத்துவேல் செயல்பட்டு வருகிறார்.

இவருக்குக் கீழ் 29 துணை இயக்குநர்கள் உட்பட பல விஞ்ஞானிகளும் பொறியாளர்களும் இத்திட்டத்துக்காக செயல்பட்டுள்ளனர்.

‘சந்திரயான் 3’ திட்டத்தின் இயக்குநர்களாக ஏற்கெனவே இரண்டு தமிழர்கள் பணியாற்றி உள்ளனர். தற்போது திரு வீர முத்துவேல் அந்தப் பெருமையைப் பெற்றுள்ளார்.

இவரது தந்தை ரயில்வே ஊழியராக வேலை பார்த்தவர்.

திரு வீர முத்துவேல் ரயில்வே பள்ளியில் படித்த பின்னர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார்.

எனினும், விண்வெளித் துறையில் உள்ள ஈடுபாடு காரணமாக பொறியியல் படிப்பை மேற்கொண்ட பின்னர் சென்னை ஐஐடி கல்வி மையத்தில் விண்வெளித் துறை சார்ந்த மேற்படிப்பை அவர் மேற்கொண்டார்.

அதன் பின்னர் சில ஆய்வுப் பணிகளில் ஈடுபட்ட வீர முத்துவேல், 1989ஆம் ஆண்டு இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோவில் விஞ்ஞானியாக பணியில் சேர்ந்தார். உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பல நிறுவனங்களில் இருந்து அழைப்பு வந்தபோதிலும், திரு வீர முத்துவேல் எந்த வாய்ப்பையும் ஏற்கவில்லை.

இந்நிலையில், ‘சந்திரயான் 3’ திட்ட இயக்குநராக அவர் நியமிக்கப்பட்டார்.

கடந்த நான்கு ஆண்டுகளில் இவரது தலைமையின்கீழ் இஸ்‌ரோவின் கனவுத்திட்டம் படிப்படியாக முன்னேறற்றம் கண்டுள்ளது.

‘சந்திரயான் 2’ திட்டத்தில் ஏற்பட்ட எதிர்பாராத பின்னடைவுகளில் இருந்து இஸ்‌ரோ விஞ்ஞானிகள் மீண்டுவந்துள்ளனர். இதற்குத் திரு வீர முத்துவேலின் பங்களிப்பு முக்கியமானதாக இருந்துள்ளது.

அவரது இந்த பங்களிப்பை உடன் பணியாற்றும் விஞ்ஞானிகளும் அதிகாரிகளும் வெகுவாகப் பாராட்டி உள்ளனர். கனவுத்திட்டம் நிறைவேறும் வரை தமது பங்களிப்பு நீடிக்கும் என்கிறார் திரு வீர முத்துவேல்.

குறிப்புச் சொற்கள்