திருப்பூர்: குடும்பப் பெண்களைப் போல் வலம்வந்து நகைக் கடைகளில் கைவரிசை காட்டுபவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என திருப்பூர் காவல்துறை பொதுமக்களுக்கு அறிவுறுத்தி உள்ளது.
செவ்வாய்க்கிழமை அன்று திருப்பூரில் உள்ள நகைக்கடைக்கு மூன்று பெண்கள் வந்துள்ளனர். பார்ப்பதற்கு குடும்பப் பெண்களைப் போல் தோற்றம் அளித்ததால் நகைக்கடை உரிமையாளருக்கு எந்தவித சந்தேகமும் ஏற்படவில்லை.
முதலில், தங்கக்காசு வாங்குவதாக கூறிய அப்பெண்கள், பின்னர் தங்க வளையல் தேவைப்படுவதாக தெரிவித்துள்ளனர். கடை உரிமையாளர் பல்வேறு அளவுகளில் வளையலைக் காண்பித்துள்ளார்.
அப்போது மூன்று பெண்களில் இருவர், அளவு பார்ப்பதாகக் கூறி வளையல்களை அணிந்து பார்த்துள்ளனர். தங்களது கைக்கு வளையல்கள் பொருத்தமாக இருக்கிறதா என்பதைப் பார்க்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.
இவ்வாறு தங்கக் காசு, தோடுகள், வளையல்கள் எனப் பலவற்றை வாங்கி அணிந்து அளவு பார்ப்பதாகவும் தங்களுக்கு ஏற்றவாறு உள்ளனவா என்பதை உறுதி செய்வதாகவும் கூறி கடைக்காரரை குழப்பத்தில் ஆழ்த்தி உள்ளனர்.
இந்நிலையில், மூன்று பெண்களில் ஒருவர் அவசர வேலையாக கிளம்புவதாகக் கூறிவிட்டு நடையைக் கட்டியுள்ளார். அடுத்த சில நிமிடங்களில் மற்ற இருவரும் தங்களுக்கு வளையல்கள் பிடிக்கவில்லை எனக் கூறி கிளம்பியுள்ளனர்.
அதன் பிறகு அவர்களிடம் எடுத்துக்காட்டிய நகைகளை மீண்டும் கடையில் காட்சிக்கு வைத்தபோது கடை உரிமையாளருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
24 கிராம் எடையுள்ள இரண்டு தங்க வளையல்கள் மாயமாகி இருப்பதை அறிந்தார். கடையில் உள்ள கண்காணிப்புக் கருவிகளில் பதிவான காட்சிகளைப் பார்த்தபோது அப்பெண்கள் நகையைத் திருடிச் சென்றது தெரிய வந்தது.
தொடர்புடைய செய்திகள்
இது குறித்து திருப்பூர் காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளது. பார்ப்பதற்கு குடும்பப் பெண்களைப் போல் இருக்கும் பெண்கள் கண்ணியமாக பேசியபடியே, இதுபோன்ற திருட்டுச் சம்பவங்களில் ஈடுபடுவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.