சென்னை: தமிழகத்தில் உள்ள அறுபது ரயில் நிலையங்கள் 630 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட உள்ளன.
‘அம்ரித் பாரத் ஸ்டேஷன்’ என்ற புதிய திட்டத்தின்கீழ் தெற்கு ரயில்வே இந்த மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ள இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தப் புதிய திட்டம் கடந்த ஆண்டு இறுதியில் மத்திய ரயில்வே அமைச்சால் அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்கள் அடுத்தடுத்து தேர்வு செய்யப்பட்டு, மேம்பாட்டுப் பணிகள் துரித கதியில் செயல்படுத்தப்படும் என ரயில்வே அமைச்சு தெரிவித்திருந்தது.
இந்நிலையில், இந்தப் புதிய திட்டத்தின் கீழ், தெற்கு ரயில்வேயில் சென்னை, திருச்சி, சேலம், மதுரை ஆகிய நான்கு கோட்டங்களில், 60 ரயில் நிலையங்கள் மேம்பாட்டுப் பணிக்காக தேர்வு செய்யப்பட்டு உள்ளன. இந்த ரயில் நிலையங்களில் 107 முக்கியப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
“தெற்கு ரயில்வேயில் ஒவ்வொரு கோட்டத்திலும் தலா பதினைந்து ரயில் நிலையங்களை தேர்வு செய்து, மேம்படுத்த உள்ளோம். இந்த ரயில் நிலையங்களை ஆய்வு செய்து, அறிக்கை அளிக்கப்பட்டிருந்தது.
“அதன் பேரில் தற்போது, முதல்கட்ட பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. அடுத்த ஆண்டு இறுதிக்குள் இந்த ரயில் நிலையங்களில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படும். அதற்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பணிகளைத் தொடங்கவும் மத்திய ரயில்வே அமைச்சு அனுமதி அளித்துள்ளது,” என ரயில்வே துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

