சென்னை: இந்திய குடிமைப் பணிகளுக்கான தேர்வில் வெற்றி பெறுபவர்கள் தங்கள் மனசாட்சிப்படி செயல்பட வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அரசின் திட்டங்கள் அனைத்தும் மக்களைச் சென்றடைய வேண்டும் என இந்திய குடிமைப் பணிகள் தேர்வில் வெற்றி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த 33 வெற்றியாளர்களை வாழ்த்தி உரையாற்றியபோது அவர் குறிப்பிட்டார்.
இந்த அறிவுறுத்தல்களை தமிழக முதல்வராக மட்டுமல்லாமல், ஒரு தந்தையின் இடத்திலிருந்து சொல்கிறேன் என்று முதல்வர் நெகிழ்ச்சியுடன் சொன்னார்.
“ஐஏஎஸ், ஐபிஎஸ் என்பது மிகவும் கடமை பொறுப்புமிக்க பதவிகளாகும். இத்தகைய உயர் பதவிகளுக்கு உங்களை உயர்த்தியவர்களை வாழ்க்கையில் எந்நாளும் மறக்காதீர்கள். “உங்களை நாடி வரும் ஏழை எளிய மக்களின் தேவைகளை நிறைவேற்றும் பொறுப்பு உங்களுக்கு உள்ளது. துடிப்பும், ஆர்வமும் கொண்டவர்களாக பணியாற்ற வேண்டும்,” என்றார் முதல்வர் ஸ்டாலின்.
இத்தோடு போதும் என்று படிப்பை நிறுத்திவிடக்கூடாது என்று குறிப்பிட்ட அவர், சமூகத்தைப் பற்றி நிறைய படிக்க வேண்டும் என்றார்.
மேலும் சட்டத்தின்படியும் மனசாட்யின்படியும் இளம் அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்றும் அரசின் திட்டங்கள் மக்களைச் சென்றடைவதை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என்றும் முதல்வர் கேட்டுக்கொண்டார்.
“மகளிர் உரிமைத்தொகை திட்டத்தைச் செயல்படுத்துவதில்தான் என் முழு கவனமும் உள்ளது. எந்தச் சிக்கலும் இல்லாமல் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கப்படும்.
“யாருக்கெல்லாம் உரிமைத்தொகை அவசியமோ, அவர்களுக்கு ஆயிரம் ரூபாய் கிடைக்கும். மகளிருக்குப் பொருளாதார வலிமையை ஏற்படுத்தும் திட்டமாக இதனை வடிவமைத்துள்ளோம்,” என்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

