முன்னாள் மாணவர்களின் உதவியோடு புதுக் கட்டடம்: பள்ளித் தலைமையாசிரியருக்குக் குவியும் பாராட்டு

முன்னாள் மாணவர்களின் உதவியோடு புதுக் கட்டடம்: பள்ளித் தலைமையாசிரியருக்குக் குவியும் பாராட்டு

2 mins read
343321cb-8d6b-4302-8537-468be65c7449
தலைமையாசிரியர் கயிலைநாதன். - படம்: ஊடகம்

வேலூர்: அரசுப் பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்களின் உதவியோடு புதிய பள்ளிக் கட்டடம் கட்டுவதற்கு முயற்சி மேற்கொண்ட தலைமையாசிரியருக்குப் பாராட்டுகள் குவிகின்றன.

மொத்தம் 21 லட்சம் ரூபாய் செலவில் புதிய கட்டடம் கட்டப்பட்டுள்ளது. அது தனியார் பள்ளிக்கு நிகராக உள்ளது என்றும் ஒரு தொண்டு நிறுவனமும் இதற்குப் பங்களித்துள்ளது என்றும் ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றியம், பல்லாலகுப்பம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளி இயங்கி வருகிறது. நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் இங்கு படிக்கின்றனர்.

ஒன்று முதல் ஐந்தாம் வகுப்புவரை உள்ள இப்பள்ளி சுமார் இருபது ஆண்டுகளாக இயங்கி வருகிறது. எனினும் போதுமான வகுப்பறைகள் இல்லை.

இந்தக் குறைபாடு காரணமாக அப்பகுதியைச் சேர்ந்த மாணவர்கள் பலர் தனியார் பள்ளிகளில் சேர்ந்து படிக்கின்றனர். கூலி வேலை செய்பவர்களும் விவசாயிகளும் கல்விக்கட்டணம் அதிகம் என்றாலும் தங்கள் பிள்ளைகள் தனியார் பள்ளியில் படிப்பதையே விரும்புகின்றனர்.

அரசுப் பள்ளியில் போதுமான வசதிகள் இல்லாததே இதற்குக் காரணம் என்பதை உணர்ந்த, ஆரம்பப் பள்ளியின் தலைமையாசிரியர் கயிலைநாதன் ஒரு திட்டம் வகுத்தார்.

அதன்படி இந்தப் பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள், தனியார் தொண்டு நிறுவனத்தை அணுகி அவர் உதவி கோரியதற்கு நல்ல பலன் கிடைத்தது. அத்தொண்டு நிறுவனம் புதிய கட்டடம் கட்ட ரூ.14 லட்சம் வழங்கியது. பள்ளியின் முன்னாள் மாணவர்கள், ஆசிரியர்கள், ஊர் பெரியவர்கள் இணைந்து ரூ.7 லட்சத்தை வசூலித்து கொடுத்துள்ளனர்.

இத்தொகையைக் கொண்டு பள்ளி வளாகத்திற்குள்ளேயே கூடுதலாக ஒரு கட்டடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

மேலும், தனியார் பள்ளிக்கு இணையாக கணினி அறை, ஆய்வுக்கூடம், ஆங்கில வழி கல்விக்குப் பயன்படுத்தப்படும் கருவி என பல்வேறு வசதிகள் புதிய கட்டடத்தில் அமைந்துள்ளன.

இதன் மூலம் மாணவர் சேர்க்கை அதிகரிக்கும் என நம்புவதாகச் சொல்கிறார் தலைமையாசிரியர் கயிலைநாதன்.

புதிய கட்டடம் விரைவில் திறக்கப்பட உள்ள நிலையில், அவர் மேற்கொண்ட முயற்சிகளைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்