தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மதுரை, கோவையிலும் மெட்ரோ ரயில்: திட்ட அறிக்கை தயார்

2 mins read
510d9dab-5290-419b-abf6-922572c48a3e
சென்னை மெட்ரோ ரயில். - படம்: ஊடகம்

சென்னை: மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான திட்ட அறிக்கை தயாராகி உள்ளது.

இந்த அறிக்கையை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தமிழக அரசிடம் வழங்கியது.

சென்னையை அடுத்து மதுரை, கோவை உள்ளிட்ட நான்கு நகரங்களிலும் மெட்ரோ ரயில் சேவையைத் தொடங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதையடுத்து திட்ட அறிக்கையைத் தயாரிக்கும் பணி சில மாதங்களுக்கு முன் தொடங்கியது.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் அதிகாரிகளை உள்ளடக்கிய குழு இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டது.

சென்னையில் தற்போது 54 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. இரு வழித்தடங்களில் இயக்கப்படும் ரயில்களை ஆயிரக்கணக்கானோர் பயன் படுத்தி வருகின்றனர். இதனால் சென்னை மாநகரில் போக்கு வரத்து நெரிசல் ஓரளவு குறைந்துள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

சென்னையை அடுத்து மற்ற முக்கிய நகரங்களிலும் மெட்ரோ ரயில் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். அதை ஏற்று கோவை, மதுரை உள்ளிட்ட நகரங்களில் மெட்ரோ ரயில்களை இயக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

மதுரையில் திருமங்கலம் பகுதி யில் இருந்து ஒத்தக்கடை பகுதி வரை 31.93 கிலோ மீட்டர் தொலைவுக்கு மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக ஊடகச் செய்தி தெரிவிக்கிறது. 27 கிலோ மீட்டர் மேம் பாலப் பாதையில், 23 மெட்ரோ ரயில் நிலையங்களும் 4.65 கிலோ மீட்டர் தொலைவுக்கு சுரங்கப் பாதையில் மூன்று ரயில் நிலையங்களும் அமைய உள்ளதாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேபோல் கோவையில் 39 கிலோ மீட்டர் தொலைவுக்கு அவிநாசி சாலையில் கருமத்தம்பட்டி வரையிலும், உக்கடத்தில் இருந்து சத்தியமங்கலம் சாலையில் வலியம்பாளையம் பிரிவு வரையிலும் மெட்ரோ ரயில் உயர்நிலையப் பாதை அமைக்கப்படுகிறது. மொத்தமாக 32 மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்