சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது தொடர்பான மேல் முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு காத்திருக்கப் போவதாக அவரது வழக்கறிஞர் சரவணன் தெரிவித்துள்ளார்.
செந்தில் பாலாஜி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த நீதிபதி, அமலாக்கத்துறை சட்டப்படிதான் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது என்றும் அமைச்சரும் சட்டத்துக்கு உட்பட்டவர்தான் என்றும் தமது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனு வரும் 24ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளதாக வழக் கறிஞர் சரவணன் தெரிவித்தார்.
“அப்போது உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் விவரங்களை உச்ச நீதிமன்றத்தில் தெரிவிப்போம். இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம்தான் இறுதியான முடிவை எடுக்கும்,” என்றார் வழக்கறிஞர் சரவணன்.
இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரத்தில் அமலாக்கத்துறை அவசர மனு ஒன்றை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.
தங்களது கருத்தை கேட்காமல் எந்தவித உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது என அம்மனுவில் அமலாக்கத்துறை வலியுறுத்தி உள்ளது.

