மு.க.ஸ்டாலின்: ஆளுநர் இன்னும் தன் போக்கை மாற்றிக் கொள்ளவில்லை

மு.க.ஸ்டாலின்: ஆளுநர் இன்னும் தன் போக்கை மாற்றிக் கொள்ளவில்லை

1 mins read
7eb5c500-28f0-4fa1-8088-1fabc5844d76
ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின். - படம்: ஊடகம்

சென்னை: தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி பொறுப்பேற்ற பின்னர் தமிழகத்தில் ஏதாவது குழப்பத்தை ஏற்படுத்துவதையே தனது வேலையாக வைத்துள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் சாடியுள்ளார்.

இதுகுறித்து பலமுறை உணர்த்திய போதிலும் ஆளுநர் தன்னை மாற்றிக் கொள்வதாகத் தெரியவில்லை என்று ஆங்கில ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்குவதாக ஆளுநர் ரவி விடுத்த அறிக்கை, அரசியலமைப்பு நெறிமுறைகளை மீறிய நடவடிக்கை என்றும் நிர்வாக ஒழுங்கு மீறல் என்றும் முதல்வர் கூறியுள்ளார்.

“ஆளுநர் தனக்குரிய வேலைகளை மட்டும் பார்க்க வேண்டும். அவர் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பி வைக்கப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் கிடப்பில் போட்டுள்ளார். தமக்கு உரிமையில்லாத செய்கைகளில் மூக்கை நுழைத்து ஆளுநர் மூக்கறுபட்டுக் கொண்டிருக்கிறார்,” என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை வடிவமைப்பதில் முக்கிய பங்காற்றும் விதமாக 2030-31ஆம் நிதியாண்டுக்குள் தமிழகத்தை ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளியலாக மாற்றுவதை இலக்காக நிர்ணயித்து திமுக அரசு செயல்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ள முதல்வர், இலக்கை அடைய, ரூ.23 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்த்தாக வேண்டும் எனக் கூறியுள்ளார்.

மேலும் 46 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் வேண்டும் என்றும் இதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்