சென்னை: சொத்துப் பத்திரத்தைக் கொடுக்க மறுப்பதாக முதியவர் ஒருவர் தனது மகன் மீது அளித்த புகாரின் பேரில் உடனடியாக நடவடிக்கை எடுத்த சென்னை காவல் ஆணையர் சந்தீப்ராய் ரத்தோருக்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
சென்னை கோயம்பேடு பகுதியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவருக்கு நான்கு மகன்கள் உள்ளனர். இவருக்குச் சொந்தமான பழக்கடையை நான்காவது மகன் சதீஷ் நிர் வகித்து வருகிறார்.
தன் பணத் தேவைக்காக அந்தக் கடையை தனியார் நிறுவனத்தில் அடகு வைத்து ரூ.25 லட்சம் கடன் பெற்றுள்ளார் சதீஷ். அதன் பிறகும் பெற்றோரை பணம் கேட்டு அவர் நச்சரித்து வந்துள்ளார்.
இதையடுத்து, தனது நிலை குறித்து மின்னஞ்சல் மூலம் சென்னை காவல் ஆணையருக்கு புகார் கடிதம் ஒன்றை அனுப்பினார் முதியவர் ராதாகிருஷ்ணன்.
தனது மனைவி படுத்த படுக்கையாக உள்ள நிலையில், மகன் வாங்கிய ரூ.25 லட்சம் கடன் தொகையை தாம் சேமித்து வைத்த பணத்தைக் கொண்டு திருப்பி அளித்திருப்பதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.
“சொத்துப் பத்திரத்தை திரும்பப் பெற குடும்பத்துடன் நேரில் வந்து கையெழுத்திடுமாறு தனியார் நிறுவனம் கூறியது. ஆனால் கையெழுத்துப் போட எனது மகன் சதீஷ் ரூ.10 லட்சம் கேட்கிறார். எனக்கு உதவுங்கள்,” என்று தமது புகார் மனுவில் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
அந்தப் புகாரின் பேரில் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு காவல் ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவிட்டதன் பேரில், அதிகாரிகள் ராதாகிருஷ்ணன் வீட்டுக்கு நேரில் சென்றனர். அங்கு குடும்ப உறுப்பினர்களை வரவழைத்து சிக்கல்களுக்குத் தீர்வு கண்டுள்ளனர்.
இதையடுத்து, ராதாகிருஷ்ணனின் சொத்துப் பத்திரத்தைப் பெற்று அவரிடம் ஒப்படைத்துள்ளனர்.

