சென்னை: தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரான சங்கரய்யாவுக்கு கௌரவ முனைவர் பட்டம் வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சங்கரய்யாவுக்கு மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் சார்பாக முனைவர் பட்டம் வழங்கப்படும் என அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சிறந்த பொதுவுடமைத் தலைவராகவும் திகழும் சங்கரய்யாவுக்கு தமிழ்நாடு அரசு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு “தகைசால் தமிழர்” என்ற விருதினை வழங்கி கௌரவித்தது. அவருக்கு 102 வயதாகிறது.
ஏழை, எளிய மக்களுக்காக தம் வாழ்நாளை அர்ப்பணித்தவரும் தமிழினத்தின் வளர்ச்சிக்காக உழைத்தவரும் ஒரு மிகச் சிறந்த சுதந்திரப் போராட்டத் தியாகியுமான சங்கரய்யாவுக்கு சிறப்பு சேர்க்கும் வகையில், அவருக்கு கௌரவ முனைவர் பட்டம் வழங்க வேண்டும் எனப் பல்வேறு தரப்பிலும் இருந்து கோரிக்கைகள் வந்துள்ளதாக அரசு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் முனைவர் பட்டம் குறித்த அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.


