சென்னை: மத்திய அமலாக்கத்துறையினர் தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வீட்டில் இன்று காலை திடீர் சோதனை நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இதனால் தமிழக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு நிலவி வருகிறது.
சென்னை சைதாப்பேட்டை பகுதியில் வசித்து வருகிறார் அமைச்சர் பொன்முடி. இன்று காலை அமலாக்கத்துறை அதிகாரிகள் முன்னறிவிப்பு இன்றி அந்த வீட்டில் சோதனை நடத்தத் தொடங்கினர்.
பொன்முடியின் சொந்த ஊரான விழுப்புரத்தில் உள்ள வீட்டிலும் சோதனை நடைபெற்றது. அமைச்சருடன் தொடர்புள்ள ஒன்பது இடங்களில் சோதனை நடத்தப்படுவதாக தமிழக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அண்மையில்தான் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், மூத்த அமைச்சர்களில் ஒருவரான பொன்முடி வீட்டிலும் அமலாக்கத்துறையினர் சோதனை நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இதனால் திமுக வட்டாரங்களில் அதிர்ச்சி நிலவுகிறது.
11 ஆண்டுகளுக்கு முன்பு பதிவான ஒரு வழக்கின் அடிப்படையில் அமலாக்கத்துறை தற்போது நடவடிக்கை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

