சென்னை: விபத்தில் சிக்கியவர்களைக் காப்பாற்றுபவர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் வெகுமதி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
சாலை விபத்தில் காயமடைபவர்களை காப்பாற்றும் பலரை ஊக்குவிக்கும் வகையில் இந்த அறிவிப்பு அமைந்துள்ளது.
தமிழகத்தில் நாள்தோறும் பல்வேறு விபத்துகள் நிகழ்கின்றன. விபத்தில் சிக்கியவர்களை சிலர் மீட்பது குறித்தும் அவர்களை உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று உயிரைக் காப்பாற்றுவது குறித்தும் அவ்வப்போது ஊடகங்களில் செய்திகள் வெளியாகின்றன.
விபத்து குறித்து மீட்புப் படையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் சம்பவ இடத்துக்கு வருவதற்கு முன்பே பலர் இவ்வாறு காப்பாற்றப்படுகிறார்கள்.
இந்நிலையில் விபத்தில் சிக்குபவர்களை காப்பாற்றுபவர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் வெகுமதி வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக அரசாணையையும் வெளியிட்டுள்ளது.
இந்த அறிவிப்பை சமூக ஆர்வலர்கள் பலரும் வரவேற்றுள்ளனர்.
“உயிரைக் காப்பாற்றும் உன்னத செயலில் ஈடுபடுபவர்கள் கண்டுகொள்ளப்படுவதில்லை. அத்தகையவர்களின் மனித நேயத்தையும் சேவையையும் அங்கீகரிக்கும் வகையில் அரசாணை வெளியாகி உள்ளது,” என சமூக ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.