விழுப்புரம்: மீன் வாங்கச் சென்ற நான்கு பெண்கள் மீது கார் மோதியதில் நால்வரும் உயிரிழந்தனர். இந்தச் சோகச் சம்பவம் ஞாயிற்றுக்கிழமை விழுப்புரத்தில் நிகழ்ந்தது.
அங்குள்ள கோட்டங்குப்பம் பகுதியைச் சேர்ந்த நான்கு மீனவப் பெண்கள் மீன்களை மொத்த விலைக்கு வாங்கி விற்பனை செய்து வருகின்றனர்.
ஞாயிற்றுக்கிழமை மீன் வாங்கச் சென்ற அவர்கள், சாலையோரம் அமர்ந்திருந்தனர். அப்போது சென்னையில் இருந்து புதுவை நோக்கிச் சென்ற கார் ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து, தாறுமாறாக ஓடி, சாலையோரம் அமர்ந்திருந்தவர்கள் மீது மோதியது.
இதில் நான்கு மீனவப் பெண்களில் இருவர் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி உயிரிழந்தனர். மற்ற இருவரும் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
எனினும் சில மணி நேரங்களில் சிகிச்சை பலனின்றி இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை நான்காக உயர்ந்தது.
விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், தலா ரூ.2 லட்சம் நிவாரணத் தொகை அறிவித்துள்ளார்.