மருத்துவமனையில் இருந்து தப்பிய கொள்ளையன்: சங்கிலி பறித்து மீண்டும் கைது

மருத்துவமனையில் இருந்து தப்பிய கொள்ளையன்: சங்கிலி பறித்து மீண்டும் கைது

1 mins read
f666bd05-d796-4616-8dad-d9395777feae
பர்மா சீனு. - படம்: ஊடகம்

சென்னை: மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தபோது தப்பியோடிய கொள்ளையன் இரண்டு மாதங்களுக்குப் பிறகு காவல்துறையிடம் சிக்கினான்.

சென்னையைச் சேர்ந்த சீனிவாசன் என்ற பர்மா சீனு மீது பல்வேறு வழிப்பறி, கொள்ளை வழக்குகள் உள்ளன.

சில மாதங்களுக்கு முன்பு சேலத்தில் நிகழ்ந்த சங்கிலிப் பறிப்பு சம்பவம் தொடர்பாக பர்மா சீனு கைது செய்யப்பட்டான். அந்த வழக்கில் அவனுக்குப் பத்தாண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

இதையடுத்து புழல் சிறையில் அடைக்க, அழைத்து வரப்பட்டபோது பர்மா சீனுவுக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக சென்னையில் உள்ள ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டான்.

எனினும் சிகிச்சையின்போது மருத்துவமனையில் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்த காவலர்களை ஏமாற்றிவிட்டு சீனு தப்பியோடினான். இதையடுத்து தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடந்தது.

இந்நிலையில் சென்னையில் தனியாக நடந்து சென்ற பெண்ணிடம் தங்கச் சங்கிலியைப் பறித்துள்ளான் சீனு. அந்தப் பெண் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்தில் உள்ள கண்காணிப்புக் கருவிகளில் பதிவான காட்சிகளை காவல்துறை ஆராய்ந்தது. அதில் சீனு சங்கிலியைப் பறிக்கும் காட்சிகள் பதிவாகி இருந்தன.

மேலும், இருசக்கர வாகனம் ஒன்றையும் திருடிய சீனு, நகையை அடமானம் வைத்து கிடைத்த தொகையில் உல்லாசமாக இருந்துள்ளான்.

குறிப்புச் சொற்கள்