சென்னை: செம்மொழிப் பூங்கா உட்பட மாநிலம் முழுவதும் உள்ள பூங்காக்களை சிங்கப்பூரில் உள்ள பூங்காங்களின் தரத்துக்கு இணையாக மாற்ற தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.
இது தொடர்பாக வேளாண்மை துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், தரம் உயர்த்தப்பட உள்ள பூங்காக்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.
அண்மையில் தமிழக வேளாண்துறை அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம் சிங்கப்பூருக்கு மேற்கொண்ட பயணத்தின்போது அங்கு தேசிய தாவரவியல் பூங்காவை பார்வையிட்டனர் என்றும் பூங்கா பராமரிப்பு, மரங்கள், பூச்செடிகள் வளர்ப்பு தொடர்பாக அப்பூங்கா அதிகாரிகள் விவரித்தனர் என்றும் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
“மேலும், சிங்கப்பூர் மெரினா நீர்த்தேக்கம் அருகில் உள்ள ‘கார்டன்ஸ் பை தி பே’ என்ற பூங்காவையும் அமைச்சர் பார்வையிட்டார். அப்பூங்காவின் சிறப்பம்சங்கள், காட்சிப்படுத்தப்பட்டுள்ள பூக்கள், ரோஜாத் தோட்டம், உலகின் மிகப் பெரிய செயற்கை நீர்வீழ்ச்சியின் அமைப்பு, நீரூற்று குறித்தெல்லாம் அமைச்சர் உள்ளிட்டோர் கேட்டறிந்தனர்.
“இதுதவிர, மரங்கள் வண்ண விளக்குகளுடன் எவ்வாறு காட்சிப்படுத்தப்படுகிறது என்பதையும், அமைச்சர் பார்வையிட்டார். அதேபோல, கடந்த 14ஆம் தேதி சிங்கப்பூர் ‘ஜுவல் சாங்கி’ பூங்காவையும் பார்வையிட்டனர்,” என்று அரசு செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.