சென்னை: தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வீட்டில் இருந்து ரூ.70 லட்சம் ரொக்கப் பணம், நகைகள், முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அவற்றின் மதிப்பு ரூ.80 லட்சம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தகவலைத் தெரிவித்துள்ள அமலாக்கத்துறை அதிகாரிகள், அமைச்சரை கைது செய்யவில்லை என்று கூறியுள்ளனர்.
அமைச்சர் பொன்முடியின் சென்னை வீடு உட்பட அவருடன் தொடர்புடைய பல்வேறு இடங்களில் திங்கட்கிழமை அமலாக்கத்துறை சோதனை நடவடிக்கை மேற்கொண்டது.
சட்டவிரோத பணப் பரிமாற்றம், அந்நிய செலாவணி மோசடி தொடர்பாக அவரிடம் திங்கட்கிழமை மாலை அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கினர். சுமார் ஏழு மணி நேரத்துக்கு மேலாக இந்த விசாரணை நீடித்தது.
பின்னர் செவ்வாய்க்கிழமை மாலை மீண்டும் விசாரணைக்கு முன்னிலையாக வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அதன் பிறகு அமலாக்கத்துறை அலுவலகத்தில் இருந்து செவ்வாய்க்கிழமை அதிகாலை அவர் வீடு திரும்பியதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
72 வயதை எட்டியுள்ள ஒரு மாநில அமைச்சரை நள்ளிரவில் விசாரித்தது மனித உரிமை மீறல் என பொன்முடியின் வழக்கறிஞர் சரவணன் செய்தியாளர்களிடம் பேசும்போது குறிப்பிட்டார்.
தமிழக ஆளுநரை தொடர்ந்து எதிர்த்து வந்ததால், அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், அனைத்து கேள்விகளுக்கும் அமைச்சர் பொறுமையாகப் பதில் அளித்த போதும், அமலாக்கத்துறையினர் மனிதாபிமானமற்ற முறையில் நடந்து கொண்டதாகக் குற்றம்சாட்டினார்.
இதற்கிடையே, அமைச்சர் பொன்முடியின் மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான கவுதம சிகாமணியின் சொகுசுக் காரை அமலாக்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். அந்தக் காரில் சில ஆவணங்கள் சிக்கியதாகவும் அதன் அடிப்படையில் அதைப் பறிமுதல் செய்ததாகவும் கூறப்படுகிறது.

