விருதுநகர்: வெம்பக்கோட்டை அகழாய்வுப் பணியின்போது சுடு மண்ணால் செய்யப்பட்ட தோசைக்கல் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கடந்த பல மாதங்களாக அப்பகுதியில் ஆய்வாளர்கள் முகாமிட்டு அகழாய்வுப் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுவரை ஆயிரக்கணக்கான தொல்பொருள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
விஜயகரிசல்குளம் மேட்டுக்காட்டில் வைப்பாற்றின் கரையில் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இதுவரை சுமார் 3,500க்கும் மேற்பட்ட பழங்காலப் பொருள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக தொல்லியல் துறை தெரிவித்துள்ளது.
“அண்மையில் அங்கு சுடுமண் பானை ஓடுகள் கிடைத்துள்ளன. அவை சிவப்பு, கறுப்பு நிறங்களில் காணப்படுகின்றன. மேலும், அகல் விளக்குகளும் கிடைத்துள்ளன.
“அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய அந்த விளக்குகள் பார்ப்போரை ஈர்க்கும் வகையில் உள்ளன. ஆண் உருவங்களுடன் கூடிய சுடுமண் பொம்மைகள் கிடைத்து வரும் நிலையில், தற்போது சுடு மண்ணால் செய்யப்பட்ட தோசைக்கல் ஒன்றும் கண்டெடுக்கப்பட்டுள்ளது,” என்று தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுவரை கிடைத்துள்ள பொருள்களைக் கொண்டு பார்க்கும்போது, அப்பகுதியில் மக்கள் திரளாக வாழ்ந்தது தெரிய வருவதாகக் குறிப்பிட்டுள்ள ஆய்வாளர்கள், அம்மக்கள் தோசைக்கல்லைப் பயன்படுத்தியதையும் அறிய முடிகிறது என்று கூறியுள்ளனர்.
வெம்பக்கோட்டையில் தற்போது இரண்டாம் கட்ட அகழாய்வுப் பணி நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


