தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சதுரகிரி காட்டுத்தீ: மலைக்கோவிலில் சிக்கிய 3,000 பக்தர்கள்

1 mins read
cdba6ba3-0ef7-4a7e-90d7-d0ecb9918e0e
சதுரகிரி மலைப்பாதை. - கோப்புப்படம்: ஊடகம்

விருதுநகர்: சதுரகிரி மலைப் பகுதியில் மூண்ட காட்டுத்தீயை அடுத்து, மூவாயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் மலையில் இருந்து கீழே இறங்கிவர முடியாமல் சிக்கிக் கொண்டனர்.

இதையடுத்து, பக்தர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை விருதுநகர் மாவட்ட நிர்வாகம் துரித கதியில் மேற்கொண்டது.

ஆடி அமாவாசையை முன்னிட்டு சதுர கிரி மலையில் உள்ள கோவில்களில் நடைபெற்ற சிறப்பு பூசைகளில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.

அக்கோவில்களுக்குச் செல்ல மலைப்பாதை உள்ளது. திங்கட்கிழமை அப்பாதை வழியே மூவாயிரத்துக்கும் மேற்பட்டோர் நடந்து சென்று கோவிலை அடைந்தனர்.

வழக்கமாக இந்தப் பாதையின் குறுக்கே ஓடும் காட்டாறுகளில் அவ்வப்போது வெள்ளப்பெருக்கு ஏற்படும். அச்சமயங்களில் பக்தர்கள் மலைக்கோவிலுக்குச் செல்ல தடை விதிக்கப்படும்.

தற்போது நீர் வரத்து இல்லாததால் காட்டாறுகள், ஓடைகள் வரண்டு கிடக்கின்றன.

இந்நிலையில், திங்கட்கிழமை இந்த மலைப்பாதையில் திடீரென காட்டுத்தீ மூண்டது. சில மணி நேரங்களில் மளமளவனெ தீ பரவியதை அடுத்து, பக்தர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

மலைப்பாதையைப் பயன்படுத்த வனத்துறை தடை விதித்தது. இதனால் பக்தர்கள் மலைக்கோவில் வளாகத்தில் தங்கவைக்கப்பட்டனர்.

வனத்துறையினருடன் தீயணைப்புக் காவலர்களும் இணைந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அதன் பின்னர் காட்டுத்தீ கட்டுக்குள் வந்ததாகவும் பக்தர்கள் பத்திரமாக தரை இறங்கியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்புச் சொற்கள்