சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார் அமைச்சர் செந்தில் பாலாஜி. இதையடுத்து அவரது மனைவி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன், செந்தில் பாலாஜி கைது நடவடிக்கை சட்டப்படி நடந்துள்ளது என்று தீர்ப்பளித்தார்.
இதை எதிர்த்து செந்தில் பாலாஜி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையே தனியார் மருத்துவமனையில் இருந்து புழல் மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்ட செந்தில் பாலாஜி, சிறை வளாகத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவர் தற்போது மருத்துவக் கண்காணிப்பில் இருப்பதாகவும் உடல்நலம் தேறிய பிறகு, விசாரணைக் கைதிகளுக்கான முதல் வகுப்பு அறைக்கு மாற்றப்படுவார் என்றும் சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

