திருச்சி: பாலியல் வழக்கை சாதகமாக முடித்துத் தர மூவாயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற பெண் காவல் உதவி ஆய்வாளர் கைதானார்.
கேரளாவைச் சேர்ந்த சரத், அஜிதா தம்பதியர் திருச்சியில் உடம்புப்பிடி நிலையம் நடத்தி வந்தனர். அங்கு முறைகேடுகள் நடப்பதாக கடந்த ஏப்ரல் மாதம் காவல்துறை வழக்குப் பதிவு செய்தது.
இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், சரத், அஜிதா ஆகிய இருவரையும் குண்டர் சட்டப்படி கைது செய்ய வாய்ப்புள்ளதாக அவர்களிடம் கூறியுள்ளார் உதவி ஆய்வாளர் ரமா.
அவ்வாறு கைது செய்யாமல் இருக்க பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். இறுதியில் மூவாயிரம் ரூபாய் பெற ஒப்புக்கொண்டதாகத் தெரிகிறது.
இந்நிலையில், அவர் மீது சரத் தம்பதியர் திருச்சி லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்தனர். அதன் பேரில் கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொண்ட லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர், உதவி ஆய்வாளர் ரமா லஞ்சப் பணத்தைப் பெற்றபோது கையும் களவுமாகப் பிடித்து கைது செய்தனர்.