தென்காசி: பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு ஒன்று தென்காசி பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது பாண்டியர் காலத்து கல்வெட்டு என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தென்காசி நகரில் இருந்து சுமார் மூன்று கிலோ மீட்டர் தொலைவில் புலியூர் என்ற பகுதியில் குளம் ஒன்று உள்ளது. அதில் தண்ணீர் தேங்கும் பட்சத்தல் அப்பகுதியில் பாசனத்துக்குப் பயன்படுத்தப்படுகிறது.
தற்போது புலியூர் குளம் வறண்டு கிடக்கும் நிலையில், குளத்தின் ஓரத்தில் ஒரு வட்ட எழுத்து கல்வெட்டு தென்படவே, தொல்லியல் ஆய்வாளர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
ஆய்வுக் குழுவினர் கல்வெட்டை ஆராய்ந்ததில் அது பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்தது எனக் கண்டறிந்தனர். கிபி 10ம் நூற்றாண்டைச் சார்ந்த பாண்டிய பேரரசர் மூன்றாம் நரசிம்ம பாண்டியனின் 14ம் ஆட்சி ஆண்டில் இந்தக் கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது என்று ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
இந்தக் கல்வெட்டை அப்பகுதி மக்கள் ஆர்வத்துடன் பார்த்துச் செல்கின்றனர். வேறு கல்வெட்டுகள் இருக்க வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.
பாண்டியர் எட்டு வரிகள் மட்டுமே பொறிக்கப்பட்டுள்ள அந்த பாண்டியர் கல்வெட்டில் நீர் மேலாண்மை தொடர்பான விவரங்கள் காணப்படுவதாகவும் இதுபோன்ற கல்வெட்டுகளை அமைப்பது பண்டைய தமிழர்களின் நடைமுறையாக இருந்து வந்துள்ளது என்றும் ஆய்வாளர்கள் கூறினர்.

