சென்னை: இலங்கையிடம் 1974ஆம் ஆண்டு கொடுக்கப்பட்ட கச்சத்தீவை மீட்பதற்கு அரசதந்திர முயற்சிகளைத் தொடங்கும்படி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டு இருக்கிறார்.
இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே இரண்டு நாள் வருகை மேற்கொண்டு இந்தியாவுக்கு வருகை அளித்துள்ள நிலையில், தமிழக முதல்வர் இந்தக் கோரிக்கையை முன்வைத்து இருக்கிறார்.
இலங்கை அதிபருடன் நடத்தும் பேச்சில் அது பற்றி விவாதிக்குமாறு பிரதமரைக் கேட்டுக்கொண்டிருக்கும் முதல்வர், இலங்கை தமிழர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவது பற்றியும் இலங்கை அதிபருடன் பேசும்படி கோரிக்கை விடுத்து இருக்கிறார்.
அதன்மூலம் இலங்கை தமிழ் மக்களின் உரிமைகளையும் சுதந்திரத்தையும் உறுதிப்படுத்துமாறு அவர் பிரதமர் மோடியைக் கேட்டுக்கொண்டு இருக்கிறார்.
“கச்சத்தீவை மீட்டால்தான் இந்திய மீனவர்களுக்கு நிரந்தர நிவாரணம் கிடைக்கும். வழிவழியாக அங்கு மீன்பிடிக்கும் உரிமை இந்திய மீனவர்களுக்கு இருக்கிறது.
“இலங்கையிடம் இருந்து கச்சத்தீவை மீட்டு அதன்மூலம் இந்த மீனவர்களின் உரிமையை மீண்டும் பெற்றுத்தர வேண்டும். இதற்கான அரசதந்திர முயற்சிகளை பிரதமர் மோடி தொடங்க வேண்டும்.
“கச்சத்தீவு இந்தியாவிடம் திரும்பும்வரை இந்திய மீனவர்களுக்குக் குறைந்தபட்சம் அந்தத் தீவு அருகே மீன்பிடிக்கும் உரிமையாவது கிடைக்க வேண்டும்” என்று பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் முதல்வர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டு இருக்கிறார்.
“கச்சத்தீவு இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்தது. தமிழ்நாட்டு மீனவர்கள் அந்தத் தீவைச் சுற்றிலும் மீன்பிடித்து வந்தார்கள். ஆனால், தமிழக அரசின் இணக்கம் இல்லாமலேயே இந்திய அரசாங்கம் ஓர் உடன்பாட்டின் மூலம் கச்சத்தீவை இலங்கைக்கு கொடுத்துவிட்டது.
தொடர்புடைய செய்திகள்
“இதனால், தமிழக மீனவர்களின் உரிமை பறிக்கப்பட்டுவிட்டது. அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுவிட்டது என்று கடிதத்தில் திரு ஸ்டாலின் குறிப்பிட்டு இருக்கிறார்.
“‘தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க முடியாமல் இலங்கை கடற்படையினரால் அலைக்கழிக்கப்படுகிறார்கள். கைது செய்யப்படுகிறார்கள்,” என்று குறிப்பிட்டுள்ள திரு ஸ்டாலின், பாக் நீரிணையில் மீன்பிடிப்பதற்கான உரிமை, தமிழக அரசாங்கத்தின் முன்னுரிமைச் செயலாக எப்போதுமே இருந்து வந்திருக்கிறது என்பதையும் சுட்டினார்.