மதுரை: மதுரை அவனியாபுரம் பகுதியைச் சேர்ந்த சண்முகசுந்தர் என்ற 24 வயது வாலிபர் எம்.ஏ. ஆங்கிலம் பயின்று அத்துடன் படிப்பை நிறுத்தாமல் சட்டக் கல்லூரியில் சேர்ந்து படித்து வருகிறார்.
பிறந்தது முதலே நாய், கோழி, பூனை, குதிரை உள்ளிட்ட பிராணிகளைப் பெரிதும் நேசிப்பவரான சண்முகசுந்தர், அன்றாடம் 10 கி.மீ. தூரம் குதிரையில் கல்லூரி சென்று வருகிறார்.
படிக்கும்போதே சிறுக சிறுக சம்பாதித்து ரூ.75,000 சேர்த்து, அந்தப் பணத்தைக் கொடுத்து ஒரு குதிரையை வாங்கி வளர்த்து வரும் சண்முகசுந்தர், நாள் ஒன்றுக்கு ரூ.400 செலவு செய்து தன் குதிரைக்குக் கோதுமை, கானப்பயிறு, சுண்டல் தோல், நவதானியம், தவிடு, கம்பு, கேழ்வரகு, பச்சரிசி உள்ளிட்ட உணவு வகைகளை அளித்து பராமரித்து வருகிறார்.
குதிரையில் பயணம் செய்வதால் மன உளைச்சல் குறைகிறது என்றும் தன்னம்பிக்கைக் கூடுகிறது என்றும் கூறும் சண்முகசுந்தர், இதுவரை சாலையில் ஆதரவு இல்லாமல் திரியும் 100க்கும் மேற்பட்ட குதிரைகளைக் காப்பாற்றி அவற்றுக்கு வாழ்வளித்து வருவதாகவும் கூறுகிறார்.
குதிரையில் கல்லூரிக்குச் செல்லும்போது தன் நெஞ்சில் அந்தக் கால தமிழ் மன்னர்களின் நினைவு ஏற்படுவதாகவும் அவர் கூறினார்.
குதிரைகளைப் போக்குவரத்துக்கு அதிகம் பயன்படுத்த வேண்டும். குதிரையேற்றத்தைப் பரவலாக்க வேண்டும். இதன்மூலம் சுற்றுச்சூழல் பாதிப்புகளைத் தவிர்க்கலாம் என்றார் அந்தச் சட்டக் கல்லூரி மாணவர்.

