விருத்தாச்சலம்: ஒலிபெருக்கிச் சாதனங்களை வைத்துக்கொண்டு பாட்டுப்பாடி மாதம் ரூ.40,000 சம்பாதிப்பதாகக் கூறும் பழனிவேல் என்ற தெருப் பாடகர், விருத்தாச்சலத்தில் இருக்கும் ஒரு காவல் நிலையத்துக்கு வெளியே ‘என் ஜீவன் பாடுது’ என்ற பாடலை நாள்தோறும் பாடி வருகிறார்.
கோமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த திரு பழனிவேல், 42, தன்னுடைய மனைவி பழனியம்மாளைக் காணவில்லை என்று ஐந்து ஆண்டுகளுக்கு முன் அந்தக் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
ஆனால் இதுவரையில் அதிகாரிகள் தன் மனைவியைக் கண்டுபிடித்துக் கொடுக்கவில்லை என்பதால் அன்றாடம் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் அந்தக் காவல் நிலையம் சென்று வெளியே நின்று கொண்டு ‘ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு’ உள்ளிட்ட சோக பாடல்களைப் பாடி வருகிறார்.
இது பற்றி கேட்டபோது காணாமல் போய்விட்ட தன் மனைவியைக் கண்டுபிடித்து கொடுக்கும்படி காவல்துறையினருக்கு அன்றாடம் நினைவூட்டவே தான் இங்கு வந்து சோக பாடல்களைப் பாடுவதாக திரு பழனிவேல் கூறினார்.
விருத்தாச்சலம் காவல்நிலையத்திற்கு வெளியே பழனிவேல் பாட்டுப் பாடுவதை ரசிக்கும் பொதுமக்கள் சிலர், அவருடைய சோகத்தைத் தாங்களும் பகிர்ந்துகொள்வதாகக் கூறிச் செல்கிறார்கள்.
விரைவில் மனைவி பழனியம்மாள் நிச்சயம் கிடைப்பார் என்று பழனிவேலுக்கு சிலர் நம்பிக்கை கூறியும் செல்கிறார்கள்.

