சென்னை: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இம்மாதம் 28ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளிலும் நடைப்பயணம் தொடங்குகிறார்.
‘என் மண் என் மக்கள்’ என்ற முழக்கத்தோடு ராமேஸ்வரத்தில் இருந்து நடக்கத் தொடங்கும் அண்ணாமலையின் இந்த வியூகத் திட்டத்தை பாஜக தலைவரும் உள்துறை அமைச்சருமான அமித் ஷா தொடங்கி வைக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
திரு அண்ணாமலை மொத்தம் ஐந்து கட்டங்களாக தமிழ்நாடு முழுவதும் நடைப்பயணத்தை மேற்கொள்ளவிருக்கிறார்.
அடுத்த ஆண்டு ஜனவரியில் சென்னையில் அந்தப் பயணம் நிறைவடையும்.
அந்த நிறைவு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்வார் என்றும் ஊடகத் தகவல்கள் தெரிவித்து இருக்கின்றன.
தமிழகத்தில் தூய்மையான, நேர்மையான அரசாங்கம் அமைய வேண்டும் என்ற அந்த மாநில மக்களின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில், மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தில் இந்த அரசியல் நடைப் பயணம் இடம்பெறும் என்றும் இதன் விளைவாக தமிழ்நாட்டில் பெரும் மாற்றங்களை எதிர்பார்க்கலாம் என்றும் பாஜக கட்சியினர் கூறுகிறார்கள்.