காவிரி தண்ணீரை திறந்துவிட நடவடிக்கை: தமிழக அரசு வலியுறுத்து

காவிரி தண்ணீரை திறந்துவிட நடவடிக்கை: தமிழக அரசு வலியுறுத்து

2 mins read
4a85c6ad-b74a-4278-80a7-6b173c6f0d53
துரைமுருகன். - படம்: ஊடகம்

சென்னை: தமிழகத்தில் குறுவை சாகுபடிக்காக காவிரியில் உரிய நீரை திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மத்திய அரசிடம் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வலியுறுத்தி உள்ளார்.

இது தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தை, டெல்லியில் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்தை நேரில் சந்தித்து அவர் வழங்கினார்.

அந்தக் கடிதத்தில் காவிரி டெல்டா விவசாயிகளுக்கு குறுவை சாகுபடி முக்கியமானது என்றும் இந்த ஆண்டு குறுவை சாகுபடியை விவசாயிகள் உரிய நேரத்தில் மேற்கொள்ள ஏதுவாக, மேட்டூர் அணை கடந்த ஜூன் 12ஆம் தேதி திறக்கப்பட்டது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தென்மேற்குப் பருவமழை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டாலும், ஜூலை மாதத்தில் மழை வேகமெடுத்துள்ள நிலையில், கர்நாடகாவில் உள்ள இரு அணைகளில் இருந்தும் அம்மாநில அரசு தமிழகத்துக்கு உரிய தண்ணீரைத் திறந்துவிடவில்லை என முதல்வர் ஸ்டாலின் சுட்டிக்காட்டி உள்ளார்.

இதனால், மேட்டூர் அணையில் நீர் இருப்பு வேகமாகக் குறைந்து வருவதாகக் குறிப்பிட்டுள்ள அவர், அணையின் தற்போதைய நீர் இருப்பு, 20 நாள்கள் மட்டுமே பாசனத்துக்குப் பயன்படும் எனத் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் தென்மேற்குப் பருவமழை குறைவாக இருப்பதால், குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையில் இருந்து வரும் நீரை மட்டுமே விவசாயிகள் நம்பி உள்ளதாகவும் தண்ணீர் தேவைக்கும் நீர்வரத்துக்கும் உள்ள இடைவெளி மிகவும் அதிகமாக இருப்பதாகவும் முதல்வர் தமது கடிதத்தில் விவரித்துள்ளார்.

எனவே, கர்நாடகாவில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீரைக் கொண்டுதான் பற்றாக்குறையைப் பூர்த்தி செய்ய இயலும் என அவர் கூறியுள்ளார்.

“தண்ணீர் பகிர்வு தொடர்பாக உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்த மாதாந்திர அட்டவணையைப் பின்பற்ற கர்நாடக அரசு எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை.

“இந்தக் கடினமான சூழ்நிலையில், கர்நாடகா உடனடியாக தண்ணீர் திறந்துவிட்டால் மட்டுமே, தமிழகத்தில் குறுவைப் பயிரைக் காப்பாற்ற முடியும். எனவே கர்நாடக அரசுக்கு உரிய அறிவுரைகளை காவிரி நீர் மேலாண்மை ஆணையம் வழங்க உத்தரவிட வேண்டும்,” என முதல்வர் மு.க.ஸ்டாலின் மேலும் வலியுறுத்தி உள்ளார்.

இதற்கிடையே, காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தை கூட்ட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கப் பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் முதல்வருக்கு கடிதம் எழுதி உள்ளார்.

இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், டெல்டா மாவட்டங்களில் சாகுபடி செய்யப்பட்ட குறுவை பயிர்களுக்கு போதிய தண்ணீர் இல்லாததால் கருகத் தொடங்கியுள்ளன என்று அவர் கவலை தெரிவித்துள்ளார்.