சென்னை: புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு விதிமுறைகளை மீறி பல்வேறு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில் வெளியான தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.
இந்நிலையில் சிறையில் உள்ள அமைச்சரை தமிழக சிறைத்துறை டிஐஜி பலமுறை சந்தித்துப் பேசியதாக வெளியான தகவல் குறித்து சிறைத்துறை விளக்கம் அளித்துள்ளது.
அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் சிறை மருத்துவமனையில் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், செந்தில் பாலாஜியை சிறைத்துறை டிஐஜி ஒருமுறை மட்டுமே விதிமுறைகளுக்கு உட்பட்டு சந்தித்துள்ளார் என்றும் நாள்தோறும் நடை பயிற்சி மேற்கொள்ளும்போது டிஐஜி இவ்வாறு கைதிகளை சந்திப்பது வழக்கம் எனவும் சிறைத்துறை விளக்கம் அளித்துள்ளது.
இதற்கிடையே புழல் சிறையில் மருத்துவர்கள் ஓய்வெடுக்கும் அறையை செந்தில் பாலாஜி அபகரித்து, அதை தனக்கு ஏற்றார்போல் மாற்றிக் கொண்டதாக சமூக ஊடகங்களில் தகவல் வெளியாகி உள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜி, புழல் மருத்துவமனைக்கு வருவதற்கு முன்பே அங்கிருந்த 11 கைதிகள் இடமாற்றம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. “செந்தில் பாலாஜி, வசதியாக இருப்பதற்குக் கட்டில், மெத்தை, தலையணை என அவர் பயன்படுத்தும் அனைத்து பொருட்களும் புதிதாக வரவழைக்கப்பட்டுள்ளன.
“செந்தில் பாலாஜி இருக்கும் இடத்திற்கு மற்ற காவலர்கள் யாரும் அனுமதி கிடையாது. அந்த அளவிற்குப் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பழங்கள், பால், பல்வேறு உணவு வகைகள் என அனைத்தும் குறிப்பிட்ட ஓர் உணவகத்தில் இருந்து வரவழைக்கப்படுகின்றன,” என்று சமூக ஊடகங்களில் அரசியல் விமர்சகர்கள் வெளியிட்ட தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

