தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

உரிமைத் தொகை திட்டம்: 36,000 முகாம்கள் நடத்தப்படும்

2 mins read
bec5edd0-48c3-41a7-8d79-2e4beec3d483
மு.க.ஸ்டாலின். - படம்: ஊடகம்

சென்னை: மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்க ஏதுவாக தமிழகம் முழுவதும் 36 ஆயிரம் முகாம்கள் அமைக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

சனிக்கிழமை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, உரிமைத் தொகை திட்டம் தொடர்பாக தமது சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின்,

“பல தலைமுறைகளைத் தாண்டியும் பயனளிக்கக் கூடிய திட்டமாக விளங்கும்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

“மகளிர் முன்னேற்றத்தில் பெரும் பாய்ச்சலாக அமையவுள்ள கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தைச் சுற்றியே என் எண்ணங்கள் உள்ளன. தகுதி வாய்ந்த பெண்களில் ஒருவர்கூட விடுபடாமல் இந்தத் திட்டம் போய்ச் சேர வேண்டும். இதற்கான விண்ணப்பங்கள் வழங்கும் பணி ஏற்கெனவே தொடங்கிவிட்டது,” என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தர்மபுரியில் ஜூலை 24ஆம் தேதி இத்திட்டத்தை தாம் தொடங்கி வைக்க உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தொழில்துறை உள்பட பல்வேறு முக்கிய துறைகளுக்கான திட்டங்களுக்கு ஒப்புதல் அளிப்பது பற்றி விவாதித்து முடிவு எடுக்கப்பட்டதாக ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.

குறிப்பாக, சென்னை அருகே உள்ள ஒரகடத்தில் அமைய இருக்கும் புதிய தொழிற்சாலைக்கு அனுமதி கொடுப்பது பற்றி ஆலோசிக்கப்பட்டதாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, சமூக பாதுகாப்பு திட்டங்கள் மூலம் வழங்கப்படும் ஓய்வூதியங்கள் உயர்த்தப்படுவதாகத் தெரிவித்தார்.

“முதியோர் மற்றும் ஆதரவற்றோருக்கான மாத உதவித்தொகை ஆயிரம் ரூபாயில் இருந்து ரூ.1,200 என கூடுதலாக வழங்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் 30 லட்சம் பயனாளிகள் பலன் பெறுவார்கள்.

“கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்ட முகாம்கள் சென்னையில் நடந்து வருகிறது. மற்ற இடங்களில் 24ஆம் தேதி தொடங்க உள்ளது. “இந்த முகாம்கள் கட்டங்களாக நடத்தப்படுகின்றன. மொத்தம் 36,000 முகாம்கள் நடத்தப்படும்,” என்றார் அமைச்சர் தங்கம் தென்னரசு

ஆகஸ்ட் மாதத்துக்குள் அனைத்து முகாம்களும் நடத்தப்படும் என்று குறிப்பிட்ட அவர், விண்ணப்பங்கள், டோக்கன் வழங்கும் பணிகள் நடந்து வருவதாகத் தெரிவித்தார்.

இதுவரை சுமார் 50 லட்சம் பேருக்கு விண்ணப்பங்கள் வழங்கப்பட்டுள்ளது என்றும் முகாம்கள் சுமுகமாக நடைபெற அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன என்றும் அமைச்சர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்