காவிரி விவகாரம்: உச்ச நீதிமன்றத்தை அணுக ராமதாஸ் வலியுறுத்து

காவிரி விவகாரம்: உச்ச நீதிமன்றத்தை அணுக ராமதாஸ் வலியுறுத்து

2 mins read
aea02a0d-0ffe-4c4d-b33f-3916f7b51f12
ராமதாஸ். - படம்: ஊடகம்

சென்னை: காவிரி நதி நீர் விவகாரம் தொடர்பாக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தை அணுக வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

காவிரியில் தண்ணீர் திறந்து விடுமாறு கர்நாடக அரசுக்கு ஆணையிடக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு அவசர வழக்கு தொடுக்க வேண்டும் என அவர் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

காவிரி நடுவர் மன்றம், உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி, ஜூலை 22ஆம் நாள் வரை 33.31 டிஎம்சி தண்ணீரை கர்நாடகம் திறந்து விட்டிருக்க வேண்டும் என்றும் ஆனால், 4 டிஎம்சிக்கும் குறைவான தண்ணீரையே கர்நாடகம் திறந்து விட்டிருக்கிறது என்றும் ராமதாஸ் சுட்டிக்காட்டி உள்ளார்.

“இன்று வரை சுமார் 30 டிஎம்சி தண்ணீரை கர்நாடக அரசு திறக்கவில்லை. கர்நாடக அணைகளில் இன்று காலை நிலவரப்படி 55 டிஎம்சிக்கும் கூடுதலான தண்ணீர் உள்ளது. அதுமட்டுமன்றி, கர்நாடக அணைகளுக்கு வரும் நீரின் அளவும் அதிகரித்திருக்கிறது.

“கர்நாடக அணைகளின் நீர் இருப்பும், நீர்வரத்தும் போதுமான அளவு உள்ள போதிலும் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க கர்நாடக அரசு முன்வரவில்லை,” என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

தமிழ்நாட்டிற்கு தண்ணீர் வழங்க கர்நாடகம் முன்வராத நிலையில், மத்திய அரசிடம் முறையிட்டும் பயன் இல்லை என்று குறிப்பிட்டுள்ள அவர், இடர்ப்பாட்டுக் கால நீர்ப்பகிர்வு முறையை நடைமுறைப்படுத்தும்படி கர்நாடக அரசுக்கு அழுத்தம் கொடுக்க காவிரி நீர் மேலாண்மை ஆணையமும் தயாராக இல்லை எனத் தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் இத்தகைய சூழலில் உச்சநீதி மன்றத்தை அணுகியே தமிழகம் தனக்கான நீதியை வென்றெடுத்துள்ளதாகச் சுட்டிக்காட்டி உள்ள அவர், இப்போதும் கருகும் குறுவை பயிர்களைக் காப்பாற்ற உச்ச நீதிமன்றத்தில் அவசர வழக்கைத் தொடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

இதற்கிடையே காவிரி நீர் பங்கீடு தொடர்பாக இரு நாள்களுக்குள் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி உள்ளார் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்