தஞ்சை: தமிழகத்தின் தொடர் அழுத்தம் காரணமாக கர்நாடக மாநில அரசு காவிரியில் இருந்து தண்ணீரைத் திறந்துவிட்டுள்ளது. இதனால் தமிழக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பாக தமிழக, கர்நாடக அரசுகளுக்கு இடையே பல ஆண்டுகளாக கருத்து வேறுபாடுகள் நிலவி வருகின்றன.
காவிரி மேலாண்மை வாரியம், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளின்படி தமிழகத்துக்கு காவிரியில் இருந்து தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்பது தமிழக அரசின் வாதம்.
ஆனால் காவிரி தண்ணீர் தங்களுக்கே போதுமானதாக இல்லை என்றும் கர்நாடக அணைகளில் உபரியாக தண்ணீர் இருப்பின் அதை தமிழகத்துக்கு திறந்துவிடத் தயார் என்றும் கர்நாடகா தரப்பில் கூறப்படுகிறது.
இந்நிலையில், நடப்பாண்டு மேட்டூர் அணையில் தண்ணீர் இருப்பு தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், தமிழகத்தில் மேற்கொள்ளப்படும் பாசனத்துக்கு தண்ணீர் தேவைப்படுகிறது. எனவே கர்நாடகா அரசு காவிரியில் இருந்து தமிழகத்துக்கு உரிய தண்ணீரைத் திறந்துவிட வேண்டும் என தமிழக அரசு கோரிக்கை விடுத்தது.
ஆனால் கர்நாடகா அரசு தண்ணீர் தர மறுத்து வந்தது. இதனால் தமிழக விவசாயிகள் கவலையில் மூழ்கிய நிலையில், தமிழக அரசு தொடர்ந்து கொடுத்த அழுத்தம் காரணமாக கே.ஆர்.எஸ், கபினி அணைகளில் இருந்து கர்நாடகா அரசு தமிழகத்துக்கு தண்ணீரை திறந்துவிட்டுள்ளது.
காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை சாகுபடி மிகவும் முக்கியமான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அடுத்த மூன்று வாரங்களுக்கு மட்டுமே தண்ணீரைத் திறக்கும் அளவிற்கு மேட்டூர் அணையில் நீர் இருப்பு உள்ளது.
தற்போது கர்நாடகா தண்ணீரைத் திறந்துவிட்டுள்ளதால், தமிழக பாசன பணிகளுக்கு மேட்டூர் அணையில் இருந்து கூடுதல் நாள்களுக்கு தண்ணீர் திறக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

