சென்னை: ரயில் நிலையத்தில் பழங்கள் விற்கும் பெண் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் சென்னையில் ரயில் பயணிகளை அதிர்ச்சியில் உறைய வைத்தது.
சென்னை, சைதாப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரி. 34 வயதான இவர் சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் பழக்கடை அமைத்து வியாபாரம் செய்து வந்தார். இவருக்கு 11 வயதுக்குட்பட்ட இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
கடந்த 19ஆம் தேதி இரவு சுமார் 8.30 மணியளவில் சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் இருந்து வீட்டுக்குப் புறப்பட்டபோது ராஜேஸ்வரியை திடீரென நான்கு பேர் வழிமறித்தனர். பின்னர் நொடிப்பொழுதில் கத்தி, அரிவாளால் ராஜேஸ்வரியை சரமாரியாக வெட்டிவிட்டு, மின்சார ரயிலில் ஏறி தப்பிச்சென்றனர்.
ராஜேஸ்வரியின் முகத்தில் பத்து வெட்டுகள் விழுந்தன. ரத்த வெள்ளத்தில் சரிந்த பின்னர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டது.
இந்நிலையில் ராஜேஸ்வரியின் தங்கை நாகவள்ளி உள்ளிட்ட ஐந்து பேர் கைதாகி உள்ளனர். நாகவள்ளியின் தூண்டுதலின் பேரில் இந்தக் கொலைச் சம்பவம் அரங்கேறி உள்ளதாகக் கூறப்படுகிறது.
நாகவள்ளி அண்மையில் இரண்டாம் திருமணம் செய்து கொண்டதாகவும் அதற்கு ராஜேஸ்வரி எதிர்ப்பு தெரிவித்ததாகவும் தெரிகிறது. இதனால் நாகவள்ளியும் அவரது இரண்டாவது கணவரும் திட்டமிட்டு கொலை செய்ததாக ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.
சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னை, தாம்பரம் ரயில் நிலையத்தில் ஸ்வாதி என்ற இளம்பெண் படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவரை ஒருதலையாகக் காதலித்த ராம்குமார் என்பவர் கைது செய்யப்பட்டார்.
தொடர்புடைய செய்திகள்
தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது இந்தக் கொலை வழக்கு. குற்றம்சாட்டப்பட்ட ராம்குமார் பின்னர் சிறையில் தன் உயிரை மாய்த்துக்கொண்டார்.