எஸ்.டி.பி.ஐ பிரமுகர்கள் வீடுகளில் புலனாய்வுத்துறை அதிகாரிகள் சோதனை

எஸ்.டி.பி.ஐ பிரமுகர்கள் வீடுகளில் புலனாய்வுத்துறை அதிகாரிகள் சோதனை

2 mins read
df07bc8a-ca5a-45b4-85ad-80a3527431a3
திருநெல்வேலியில் உள்ள எஸ்.டி.பி.ஐ. கட்சித் தலைவர் முபாரக் வீடு உட்பட பலரது வீடுகளில் தேசிய புலனாய்வுத்துறை அதிரடிச் சோதனை மேற்கொண்டது. - படம்: ஊடகம்

சென்னை: தேசிய புலனாய்வுத் துறை அதிகாரிகள் திருநெல்வேலியில் உள்ள எஸ்.டி.பி.ஐ. கட்சித் தலைவர் முபாரக் வீடு உட்பட அக்கட்சியைச் சேர்ந்த பலரது வீடுகளிலும் அலுவலகங்களிலும் அதிரடிச் சோதனை மேற்கொண்டனர்.

தஞ்சாவூர், திருச்சி, விழுப்புரம், திருநெல்வேலி, புதுக்கோட்டை, திருச்சி, மதுரை, கோயம்புத்தூர், திருப்பூர் ஆகிய ஒன்பது மாவட்டங்களில் 24 இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

எஸ்டிபிஐ மாநில தலைவர் வீட்டில் என்ஐஏ சோதனை நடத்துவது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று அக்கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்த சோதனையை எஸ்டிபிஐ கட்சி வன்மையாக கண்டிக்கிறது. இது அரசியல் பழிவாங்கும் மற்றும் மக்களின் கவனத்தை திசைதிருப்பும் மத்திய அரசின் ஏவல் நடவடிக்கையாகும் என்று  எஸ்டிபிஐ கட்சியின் மாநில துணைத் தலைவர் அப்துல் ஹமீது வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கடந்த 15 ஆண்டுகளாக மக்கள் நல அரசியலை முன்னெடுத்துவரும் எஸ்டிபிஐ கட்சி தேர்தல் அரசியல், போராட்ட அரசியல் மட்டுமின்றி நெருக்கடி காலங்களிலும் மக்கள் நலனுக்காக களத்தில் முன்னணியில் நின்று போராடிக்கொண்டிருக்கிறது.

“ஆளும் அரசுகளின் கவனத்துக்கு மக்கள் பிரச்சினைகளைக் கொண்டு செல்வதில் முன்னணியில் இருக்கின்றது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த முன்னாள் நகரச் செயலாளர் திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாகவே இந்தச் சோதனை நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.

“இவர், அந்தப் பகுதியில் மதமாற்றத்தில் ஈடுபட்ட சிலரைக் கண்டித்தார்.

இந்நிலையில் ராமலிங்கம், கடந்த 2019ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 5ஆம் தேதி தனது கடையில் இருந்து வீட்டுக்குச் செல்லும்போது சிலரால் கொலை செய்யப்பட்டார்.

முன்னதாக இந்தக் கொலை வழக்கு தொடர்பாக 18 பேர் மீது வழக்கு பதியப்பட்டது. பின்னர் இந்த வழக்கு விசாரணை தேசிய புலனாய்வுத்துறை (என்ஐஏ) பிரிவுக்கு மாற்றப்பட்டது.

இந்நிலையில், தஞ்சாவூர், திருநெல்வேலி, புதுக்கோட்டை, திருச்சி, மதுரை, கோயம்புத்தூர், திருப்பூர், விழுப்புரம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் தேசிய புலனாய்வுத்துறை அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமையன்று அதிரடிச் சோதனைகளை நடத்தி வருகின்றனர்.

இந்தக் கொலையில் பயங்கரவாதிகளுக்குத் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் இந்தச் சோதனை நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன என்று கூறப்படுகிறது.