கோயம்புத்தூர்: கோயம்புத்தூரில் ஜி-20 மாநாட்டின் அறிவியல் பிரிவு மாநாடு ‘எஸ்-20’ என்ற தலைப்பில் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்றது. மாநாட்டின் இறுதி நாளான சனிக்கிழமை அப்பிரிவின் துணைத் தலைவர் பேராசிரியர் அசுதோஷ் வர்மா செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
“ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்” என்ற தலைப்பில் நடத்தப்பட்ட அனைத்துலக மாநாடு நிகழ்ச்சியில் இருபது நாடுகளைச் சேர்ந்த நூற்றுக்கு மேற்பட்ட வல்லுநர்கள் பங்கேற்றனர். அந்த மாநாட்டில் காலநிலை மாற்றத்தால் உலகம் எதிர்நோக்கும் பேரழிவுகள், அவற்றைத் தவிர்க்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற் படுத்தாத சூரியஒளி, காற்றாலை உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தித் துறைக்கு அனைத்துலக அளவில் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என இந்த மாநாட்டில் வலி யுறுத்தப்பட்டது.
குறிப்பாக, சூரியஒளி ஆற்றல் உற்பத்தித் துறையில், பகலில் உற்பத்தி செய்யப்படும் மின் சாரத்தை சேமித்துவைக்க போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் உடனுக்குடன் பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது. எனவே, மின்சேமிப்பு கட்டமைப்பை வலுப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.
எதிர்வரும் காலங்களில் கொரோனா போன்ற பெருந்தொற்று பரவாமல் தடுத்தல், எதிர்கொள்ளுதல் உள்ளிட்டவை குறித்தும் வல்லுநர்கள் கருத்து களைப் பகிர்ந்துகொண்டனர்.