புதுடெல்லி: பாஸ்மதி அல்லாத மற்ற ரக அரிசி வகைகளை ஏற்றுமதி செய்வதற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.
உலகின் மிகப்பெரிய அரிசி ஏற்றுமதியாளரான இந்தியா, 2024ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நடைபெறவிருக்கும் பொதுத்தேர்தலுக்கு முன்னதாக உள்நாட்டில் அரிசி விலையைக் கட்டுக்குள் வைப்பதற்காக இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
டெல்லியில் சில்லறை அரிசி விலை இவ்வாண்டு ஏறக்குறைய 15 விழுக்காடு உயர்ந்துள்ளது, அதேநேரத்தில் நாடு தழுவிய சராசரி விலை 8 விழுக்காட்டுக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.
இதுகுறித்து வெளிநாட்டு வர்த்தகத்துறை இயக்குநரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “பாஸ்மதி அல்லாத பிற வகைகளைச் சேர்ந்த வெள்ளை நிற அரிசி ஏற்றுமதிக்குத் தடை விதிக்கப்படுகிறது.
“அந்த வகை அரிசியைப் பாதியளவில் குத்தியது, முழுவதுமாக குத்தியது, தீட்டப்பட்ட அரிசி என எந்த வடிவிலும் ஏற்றுமதி செய்யக் கூடாது. அதேநேரத்தில் ஏற்கெனவே, ஏற்றுமதிக்காக கப்பல்களில் ஏற்றப்பட்டுவிட்ட அரிசிக்கு இந்தத் தடை பொருந்தாது.
“எனினும், மத்திய அரசு சில அசாதாரண சூழல்களில் இந்தத் தடையில் இருந்து விலக்கு அளிக்கும். முக்கியமாக பிற நாடுகளின் உணவுப் பாதுகாப்பு தொடா்பான விஷயம் மற்றும் பிற நாடுகளின் கோரிக்கைகள் அடிப்படையில் அரிசி ஏற்றுமதித் தடையில் இருந்து தளர்வுகள் அளிக்கப்படும்,” என்று கூறப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களாக கோதுமை, அரிசி, பால், பழங்கள், காய்கறிகளின் விலை உயர்வால் இந்தியா திணறி வருகிறது.
உணவு அமைச்சகத்தின் தரவுகளின்படி, டெல்லியில் சில்லறை அரிசி விலை இந்த ஆண்டு சுமார் 15 விழுக்காடு உயர்ந்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
டெல்லியின் சில பகுதிகளில் தக்காளியின் விலை 2023ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து ஐந்து மடங்குக்கு மேல் உயர்ந்துள்ளது, ஏனெனில் பல பகுதிகளில் கனமழையால் பயிர்கள் சேதமடைந்தன, டிரக் வாகன இயக்கங்கள் பாதிக்கப்பட்டன.
உலகின் அரிசி ஏற்றுமதியில் இந்தியாவின் பங்களிப்பு 40 விழுக்காட்டுக்கும் அதிகம். நாடு 100க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு அரிசி வழங்குகிறது.

