45 துணை ஆட்சியர்கள் பதவி இறக்கம்: தமிழக அரசு நடவடிக்கை

45 துணை ஆட்சியர்கள் பதவி இறக்கம்: தமிழக அரசு நடவடிக்கை

2 mins read
bca2e623-8de0-4724-878d-58695d2aead8
தமிழக அரசின் தலைமைச் செயலகம். - படம்: ஊடகம்

சென்னை: அண்மையில் பதவி உயர்வு பெற்ற 45 துணை ஆட்சியர்கள் பதவி இறக்கம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

முறைகேடாக பதவி உயர்வு பெற்றதால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பதவி இறக்க நடவடிக்கைக்கு ஆளாகியுள்ள 45 பேரும் வட்டாட்சியர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 2014 முதல் 2019 வரை தமிழகத்தில் வட்டாட்சியர்களாகப் பொறுப்பில் இருந்தவர்களுக்குப் பதவி உயர்வு வழங்கப்பட்டது. எனினும் இதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாகப் புகார் எழுந்தது.

புகார் எழுப்பிய தரப்பினர் உச்ச நீதிமன்றத்தை அணுகினர். பதவி உயர்வு பட்டியலில் தகுதி உள்ளவர்களின் பெயர்கள் இடம்பெறவில்லை என்றும் இந்த முறைகேடு குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், முறைகேடாக பதவி உயர்வு பெற்ற துணை ஆட்சியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீடு அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

இதையடுத்து நீதிமன்ற உத்தரவின் படி 45 துணை ஆட்சியர்களை வட்டாட்சியர்களாக பதவியிறக்கம் செய்து தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ள அரசு, உடனடியாக இந்த அறிவிப்பு நடைமுறைக்கு வரும் என்றும் தெரிவித்துள்ளது.

இதனிடையே, வருவாய், பேரிடர் மேலாண்மைத் துறையில் 110 வட்டாட்சியர்கள் துணை ஆட்சியர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். இதற்கான உத்தரவையும் தமிழக அரசு ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டது.

உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள அண்மைய தீர்ப்பின் அடிப்படையில் பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்