சென்னை: தமிழகத்தின் கடும் எதிர்ப்பை பொருட்படுத்தாமல் மேகதாது அணை கட்டுவதற்கு முன்னேற்பாடாக கர்நாடக வனத்துறை சார்பில் நில அளவீடு செய்யும் பணி தொடங்கி உள்ளது.
இதற்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
கர்நாடக அரசின் இந்த நடவடிக்கையை தடுத்து நிறுத்தும்படி மத்திய அரசிடம் முறையிட தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனிடையே, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், அணை கட்ட திட்டமிட்டுள்ள இடத்தில் எல்லைகளை அடையாளம் காண்பதற்கும் அகற்றப்பட வேண்டிய மரங்களை கணக்கீடு செய்வதற்கும், கர்நாடக வனத்துறை சார்பில், 29 துணை வன அதிகாரிகளை நியமிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
காவிரி நடுவர் மன்றமும் உச்ச நீதிமன்றமும் வழங்கியுள்ள தீர்ப்புகளின்படி காவிரியின் குறுக்கே தடுப்பணை கட்டுவதற்கு கர்நாடக மாநிலத்துக்கு எந்த உரிமையும் இல்லை என வைகோ சுட்டிக்காட்டி உள்ளார்.
தமிழக அரசு உடனடியாக உச்ச நீதிமன்றத்தில் இது தொடர்பாக மற்றொரு மனு தாக்கல் செய்து மேகதாது அணை வழக்கை துரிதப்படுத்த வேண்டும் என திரு. வைகோ மேலும் வலியுறுத்தி உள்ளார்.
இதனிடையே, மேகதாது அணைக்கான வரைவு திட்ட அறிக்கையைத் தயாரிக்க கர்நாடக அரசுக்கு அளிக்கப்பட்ட அனுமதியை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், மேகதாது அணைக்கு அனுமதி அளிப்பது குறித்து காவிரி ஆணையக் கூட்டத்தில் விவாதிப்பதற்குகூட உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், அதை மீறி மேகதாது அணை கட்டுவதற்கான பணிகளை கர்நாடகம் மேற்கொண்டு வருவது கண்டிக்கத்தக்கது என அவர் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

