சென்னை: விசாரணைக்கு நேரில் முன்னிலையாக வேண்டும் என நான்கு முறை அழைப்பாணை அனுப்பியும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் இளைய சகோதரர் அசோக் குமார் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
அசோக்குமார் தலைமறைவாகி உள்ளதாகவும் சட்ட ரீதியாக அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க அமலாக்கத்துறை முடிவு செய்துள்ளதாகவும் ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஒரு மாதமாக அசோக்குமார் தலைமறைவாக இருப்பதால், அவரை தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கவும் அமலாக்கத்துறை திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார் அமைச்சர் செந்தில் பாலாஜி. அவர் தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், அவரது சகோதரர் அசோக்குமாரையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்துள்ளது அமலாக்கத்துறை.
சட்டவிரோத பணப் பறிமாற்றம் தொடர்பாக 40 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களில் அசோக்குமாரும் ஒருவர். அவரை விசாரிப்பதற்காக அமலாக்கத்துறை அழைப்பாணை அனுப்பியபோது தனக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதாகக்கூறி, விசாரணைக்கு முன்னிலையாக அவகாசம் கோரி இருந்தார்.
எனினும் நான்கு முறை அவர் இவ்வாறு அவகாசம் கேட்டு விசாரணையை தவிர்த்ததை அடுத்து அமலாக்கத்துறை அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசித்து வருகிறது.
இதற்கிடையே இருபது பேர் நேரில் முன்னிலையாகி அமலாக்கத்துறை விசாரணைக்கு ஒத்துழைத்ததாக ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.

