தூத்துக்குடி: கோவில்பட்டி அருகே உள்ள தீப்பெட்டி தொழிற்சாலையில் நிகழ்ந்த பயங்கர தீ விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள பொருள்கள் தீக்கிரையாயின. எனினும் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்பட்டதாகத் தகவல் இல்லை.
திட்டங்குளம் பகுதியில் உள்ள தொழிற்பேட்டையில் அந்த ஆலை இயங்கி வருகிறது.
திஙகட்கிழமை காலை தொழிலாளர்கள் வழக்கம்போல் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென ஆலை முழுவதும் புகைமூட்டம் பரவியது.
பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் ஒவ்வொரு பகுதியாக சோதனை மேற்கொண்டபோது, அலுவலக அறைக்குள் தீப்பிடித்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து அருகில் உள்ள காவல் நிலையம், தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெஎரிவிக்கப்பட்டது.
தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். பல மணிநேர போராட்டத்துக்குப் பிறகு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்ட போதிலும், அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த ஏராளமான முக்கிய ஆவணங்கள் எரிந்து நாசமாகிவிட்டதாக ஆலை நிர்வாகம் தெரிவித்தது.
தீக்கிரையான பொருள்களின் மதிப்பு ரூ.15 லட்சம் இருக்கும் என்றும் தொழிலாளர்கள் யாருக்கும் எந்தவித பாதிப்பும் இல்லையென்றும் தெரிவிக்கப்பட்டது.
மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கக்கூடும் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

