அரசுப் பணியாளர் தேர்வாணைய தேர்வில் வெற்றி: சாதித்துக் காட்டிய உணவு விநியோகிப்பாளருக்கு குவியும் பாராட்டுகள்

அரசுப் பணியாளர் தேர்வாணைய தேர்வில் வெற்றி: சாதித்துக் காட்டிய உணவு விநியோகிப்பாளருக்கு குவியும் பாராட்டுகள்

1 mins read
c0713427-dddf-4e5a-a962-bf0c1c474887
குடும்பத்தாருடன் விக்னேஷ். - படம்: ஊடகம்

சென்னை: தனியார் நிறுவனத்தில் உணவு விநியோகிப்பாளராகப் பணியாற்றி வரும் இளையர், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். அவருக்குப் பாராட்டுகள் குவிகின்றன.

ஆண்டுதோறும் அரசுப் பணியாளர் தேர்வாணையத் தேர்வில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்கின்றனர். அதில் தேர்ச்சி பெற கடும் முயற்சி தேவைப்படும்.

உணவு விநியோகிப்பாளர் பணி நேரத்தையும் உடல் உழைப்பையும் விழுங்கக்கூடியது. ஆனால் பணி சார்ந்த களைப்பையும் மீறி ஒவ்வொரு நாளும் தேர்வுக்காகப் படிப்பதற்கும் நேரம் ஒதுக்கி வந்துள்ளார் விக்னேஷ்.

இவ்வாறு இரவு, பகல் பாராமல் படித்ததற்குப் பரிசாக தேர்வில் வெற்றிபெற்றுள்ள விக்னேஷுக்கு அவர் பணியாற்றி வரும் நிறுவனமும் பாராட்டு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அந்நிறுவனத்தின் அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் இடம்பெற்றுள்ள பதிவுக்கு ஏராளமானோர் பின்னூட்டமிட்டுள்ளனர்.

“எங்கள் நிறுவனத்தில் உணவு விநியோகிப்பாளராக வேலை செய்து கொண்டே தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார் விக்னேஷ். அவருக்கு அனைவரும் ஒரு ‘லைக்’ போடுங்கள்,” என்று அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், விக்னேஷ் தனது குடும்பத்தினருடன் இருக்கும் புகைப்படமும் அப்பதிவில் இடம்பெற்றுள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தேர்வு என்பது தமிழக அரசின் பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வாகும். பல்வேறு பிரிவுகளாக இத்தேர்வு நடத்தப்படும்.

குறிப்புச் சொற்கள்