ராமேசுவரம்: தமிழக மீனவர்கள் ஒன்பது பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
நெடுந்தீவு கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு திடீரென வந்து சேர்ந்த கடற்படையினர் மீனவர்களைக் கைது செய்ததுடன், அவர்களுடைய இரண்டு விசைப்படகுகளையும் பறிமுதல் செய்ததாகக் கூறப்படுகிறது.
விசைப்படகுகள் தொடர்ந்து பறிமுதல் செய்யப்படுவதால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக தமிழக மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
அண்மையில் ராமேசுவரம் பகுதியைச் சேர்ந்த 15 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்ததை அடுத்து, தமிழக மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், 15 பேரையும் யாழ்ப்பாணம் நீதிமன்றம் விடுதலை செய்தது. மீண்டும் ஒரு முறை இலங்கை கடற்பகுதிக்குள் நுழைந்தால் சிறையில் அடைக்கப்படுவர் என்று நீதிபதி எச்சரித்திருந்தார். எனினும், பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் இரண்டு விசைப்படகுகள் விடுவிக்கப்படவில்லை.
இந்நிலையில், ஒன்பது தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால் மீனவர்கள் மத்தியில் கொந்தளிப்பு நிலவுகிறது.

