மணிப்பூர் விவகாரம்: தமிழகத்தில் கல்லூரி மாணவர்கள் கொந்தளிப்பு, போராட்டம்

மணிப்பூர் விவகாரம்: தமிழகத்தில் கல்லூரி மாணவர்கள் கொந்தளிப்பு, போராட்டம்

2 mins read
e102cfc8-5339-4b87-9519-e1dd4a98b969
போராட்டத்தில் ஈடுபட்ட சென்னை மாநிலக் கல்லூரி மாணவர்கள். - படம்: ஊடகம்

சென்னை: மணிப்பூர் மாநிலத்தில் பட்டியலின பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டதைக் கண்டித்தும் அங்கு நிகழ்ந்து வரும் வன்முறையை முடிவுக்குக் கொண்டு வர வலியுறுத்தியும் தமிழகத்தில் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை, சேலம், தஞ்சை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு, சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களை நடத்தி வருவதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சென்னையில் மாநிலக் கல்லூரி மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து நடத்திய ஆர்ப்பாட்டத்தில் இருநூறுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அப்போது கண்டன வாசகங்கள் அடங்கிய பதாகைகளைக் கையில் ஏந்தியிருந்த மாணவர்கள் மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களும் எழுப்பினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாணவர்கள், பட்டியலின பெண்களுக்கு நிகழ்ந்துள்ள பாலியல் வன்கொடுமையானது மிகப்பெரும் கொடுஞ்செயல் என்றும் மணிப்பூரில் சமூக நீதிக்கு எதிரான சம்பவங்கள் நடந்து வருவதாகவும் குறிப்பிட்டனர்.

இரண்டு மாதங்களுக்குப் பிறகும்கூட கலவரம் குறித்து பிரதமரோ, மணிப்பூர் முதல்வரோ வாய் திறக்காமல் இருப்பது ஏன் என்று கேள்வி எழுப்பிய மாணவர்கள், மணிப்பூரில் அமைதி திரும்பாவிட்டால், தங்களின் உள்ளிருப்பு போராட்டம் சாலை மறியலாக மாறும் என்றனர்.

மேலும், தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வெடிக்கும் என்றும் எச்சரித்தனர்.

சென்னையில் நந்தனம் அரசுக் கல்லூரி மாணவர்கள் முந்நூறு பேர் திங்கட்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். கல்லூரி நிர்வாகத்தின் அனுமதியோடு இப்போராட்டம் நடைபெற்றது.

சேலத்தில் அரசு கலைக் கல்லூரி மாணவர்களும் திங்கட்கிழமை போராட்டத்தில் குதித்தனர். கல்லூரி முன்பு திரளாகக் கூடிய மாணவர்கள் மணிப்பூர் மாநில அரசைக் கலைக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், மத்திய அரசு பாராமுகமாக இருப்பதாகவும் அமைதிக் குழுவை அனுப்பி சட்ட ஒழுங்கை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மாணவர்கள் வலியுறுத்தினர்.

கும்பகோணம் அரசு ஆண்கள் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல், தஞ்சையில் மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரி மாணவர்களும் போராட்டம் நடத்தினர்.

குறிப்புச் சொற்கள்