தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சென்னையில் ஐந்து மணி நேரம் தாமதம்; 35 பயணிகளை ஏற்றாமல் சென்ற விமானம்

2 mins read
48d1eab1-b21d-4df9-98ef-499b5f6666dc
சென்னை விமான நிலையம். - படம்: ஊடகம்

சென்னை: அபுதாபிக்குச் செல்ல காத்திருந்த 35 பயணிகளை ஏற்றாமல் சென்ற விமானத்தால் சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

தனியார் விமான நிறுவனத்தின் ஊழியர்களால் தங்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டதாகக் கூறி அப்பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திங்கட்கிழமை இரவு சென்னையில் இருந்து அபிதாபி செல்வதற்காக அந்த 35 பயணிகளும் ‘ஏர்அரேபியா ஏர்லைன்ஸ்’ பயணிகள் விமானத்தில் செல்ல பயணச்சீட்டு வைத்திருந்தனர்.

அன்று இரவு ஏழு மணியளவில் அந்த விமானம் சென்னை வந்தடைந்தபோது பலத்த மழை பெய்துகொண்டிருந்தது.

இதனால் விமானம் தரையிறங்க முடியாத நிலை ஏற்பட்டதை அடுத்து, பெங்களூருக்குத் திருப்பிவிடப்பட்டது.

மேலும், சென்னையில் இருந்து இரவு 7:45 மணிக்கு அபுதாபி புறப்பட்டுச் செல்ல வேண்டிய விமானம் தாமதமாக செல்லும் எனவும் அறிவிக்கப்பட்டது. முன்னதாக அந்த விமானத்தில் பயணம் செய்ய தயாராக இருந்த 182 பயணிகளும் குடியுரிமை, பாதுகாப்பு சோதனைகள் முடித்துவிட்டு காத்திருந்தனர்.

அவர்களில் ஐந்து பெண்கள் உள்ளிட்ட 35 பேர் சுமார் ஐந்து மணி நேரம் ஒரு குழுவாக அமர்ந்திருந்தனர்.

அதன் பின்னர் சலிப்படைந்து விமான நிறுவன ஊழியர்களை அணுகியபோது, நள்ளிரவு 12:18 மணிக்கு அந்த விமானம் அபுதாபிக்குப் புறப்பட்டுச் சென்றுவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இதனால் 35 பயணிகளும் கடும் அதிர்ச்சி அடைந்தனர். புதிதாக பயணச்சீட்டு பெற வேண்டும் என விமான நிறுவன ஊழியர்கள் கூறியதால் ஆவேசமடைந்த பயணிகள், விமானம் ஐந்து மணி நேரம்தாமதமாக புறப்பட்ட நிலையில் முறையான அறிவிப்பின்றி 35 பயணிகளையும் ஏற்றாமல் சென்றது ஏன்? எனக் கேள்வி எழுப்பினர்.

இதையடுத்து பயணிகள் விமான நிலையத்திலேயே உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகள் அவர்களை சமாதானப்படுத்தினர்.

பயணிகள் தெரிவித்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்