கடலூர்: எருமை மாடு திருடுபோனதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் விசாரணை நடத்திய காவல்துறையினர், மாடு வெளிப்படுத்திய பாசத்தைக் கண்டு உரியவரிடம் அதை ஒப்படைத்தனர்.
கடலூர் மாவட்டம் வீரசோழன் கிராமத்தை சேர்ந்த பாலமுருகன் (வயது 54) என்பவர் வளர்த்து வந்த எருமை மாடு மூன்று மாதங்களுக்கு முன்பு திடீரென மாயமானது.
இந்நிலையில், அருகே உள்ள கீழப்பழஞ்சநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த பழனிவேல் என்பவரது வீட்டில் தனது எருமை மாடு இருப்பதாக அவர் காவல்துறையில் புகார் அளித்தார். அதை மீட்டுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டதை அடுத்து விசாரணை தொடங்கியது.
எருமை மாடு காவல் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டது. பாலமுருகனும் பழனிவேலும் அதற்கு உரிமை கொண்டாடிய நிலையில், எருமை மாடு இருவரையும் பார்த்தவுடன் தலையை அசைத்து பாசத்தை வெளிப்படுத்தியது.
கட்டி வைக்கப்பட்ட எருமை மாட்டை அவிழ்த்துவிட்டு யாருடன் அது செல்கிறதோ, அவருக்குத்தான் அது சொந்தம் என்று காவல்துறையினர் தெரிவித்தனர். ஆனால் அந்த எருமை மாடு இருவரிடமும் ஒரே மாதிரி நடந்துகொண்டது.
இறுதியில், பழனிவேல் சில சைகைகளைக் காண்பித்து அழைத்தபோது, அந்த மாடு அவரை நோக்கி ஓடிவந்தது. மேலும், எருமை மாடும் சில சைகைகளை வெளிப்படுத்தியது.
நீண்ட காலம் வளர்த்தவரே இவ்வாறு பயிற்சி அளித்திருக்க முடியும் என்று கூறிய காவல்துறையினர், அந்த எருமை மாட்டை பழனிவேல் கொண்டு செல்ல அனுமதித்தனர்.

