சென்னை: போலி ஆவணங்களை உருவாக்கி முறைகேடாக சிமெண்ட் விற்பனையில் ஈடுபட்ட அதிகாரிகளுக்கு 39 ஆண்டுகளுக்குப் பின்னர் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 1982ஆம் ஆண்டு சிமெண்ட் விற்பனையை முறைப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.
அதன்படி வெளிநாடுகளில் இருந்து சிமெண்ட் இறக்குமதி செய்து மக்களுக்கு குறைந்த விலையில் அதை விநியோகம் செய்வது என்று முடிவானது. இதற்காக ‘தமிழ்நாடு சிமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட்’ என்ற நிறுவனத்தையும் அரசு தொடங்கியது.
இதையடுத்து வடகொரியா, தென்கொரியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து சிமெண்ட் மூட்டைகள் இறக்குமதி செய்யப்பட்டன.
பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் விண்ணப்பங்களின் அடிப்படையில் அவை குறைந்த விலைக்கு வழங்கப்பட்டன.
இந்நிலையில், போலி விண்ணப்பங்கள், திட்ட அனுமதி, கட்டட அனுமதி போன்ற ஆவணங்கள் மூலம் இந்த சிமெண்ட் மூட்டைகளை சிலர் வெளிச்சந்தையில் விற்பது தெரியவந்தது.
இவ்வாறு அதிக விலைக்கு விற்பதில் அரசு அதிகாரிகளும் உடந்தையாக இருந்தனர். இதையடுத்து நான்கு அதிகாரிகள் உள்ளிட்ட சிலர் மீது லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
ஏறத்தாழ 25 ஆண்டுகளுக்குப் பிறகு குற்றம்சாட்டப்பட்ட எட்டு பேரை சிறப்பு நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டது.
தொடர்புடைய செய்திகள்
தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில், லஞ்ச ஒழிப்பு காவல்துறை மேல்முறையீடு செய்தது. குற்றம்சாட்டப்பட்ட நான்கு அதிகாரிகளில் ஒருவர் காலமாகிவிட்டார்.
இந்நிலையில் மற்ற மூவருக்கும் நான்கு ஆண்டு சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதன் பேரில் 68 வயதைக் கடந்துவிட்ட மூவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 39 ஆண்டுகளுக்குப் பிறகு இவர்களுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.