நிலங்களைக் கையகப்படுத்தும் என்எல்சி; போராடும் மக்கள்

நிலங்களைக் கையகப்படுத்தும் என்எல்சி; போராடும் மக்கள்

2 mins read
8deccf5d-0411-4dcb-861c-fe4570433dd3
என்எல்சி நிர்வாகத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த மே மாதம் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. - கோப்புப் படம்: ஊடகம்

கடலூர்: நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் (என்எல்சி) சுரங்கப் பணிகளை விரிவுபடுத்த தமிழக விவசாயிகளின் விளைநிலங்கள் கையகப்படுத்தப்படுவதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

அறுவடைக்கு காத்திருக்கும் இவ்வேளையில், தங்களுடைய நிலங்களைப் பறிப்பது தங்களுக்கு இழைக்கப்படும் பெரும் அநீதி என விவசாயிகள் கண்ணீர் மல்கத் தெரிவித்துள்ளனர்.

என்எல்சி நிர்வாகத்துக்குப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

கடலூர் மாவட்டத்தில் நெய்வேலி நிலக்கரி நிறுவனம் தனது சுரங்கப்பணிகளை விரிவுபடுத்துவதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.

இதற்காக விளைநிலத்தை கையகப்படுத்த பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆனால் என்எல்சி நிர்வாகம் ஏற்கெனவே வளையமாதேவி கிராமத்தில் உரிய இழப்பீடு கொடுத்து கையகப்படுத்தப்பட்ட நிலத்தில்தான் சுரங்கப் பணிக்கான கால்வாய் வெட்டும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படுவதாகக் கூறியுள்ளது.

பொது மக்களுக்கு ஆதரவாக அரசியல் கட்சியினரும் களமிறங்கியுள்ள நிலையில், காவல்துறையின் பலத்த பாதுகாப்புடன் என்எல்சி நிறுவன நிர்வாகம் வளையமாதேவி கிராமத்தில் தனது பணிகளை மேற்கொண்டுள்ளது. சுமார் இரண்டாயிரம் காவல்துறையினர் அங்கு குவிக்கப்பட்டுள்ளதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வாய்க்கால் வெட்டும் பணிக்காக நவீன இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதனால் அங்கு பதற்றம் நிலவுகிறது.

நிலக்கரி எடுப்பதற்காக தமிழர்களிடம் பறிக்கப்பட்ட ஆயிரம் ஏக்கர் நிலங்கள் இன்னும் பயன்படுத்தாது இருப்பில் உள்ள நிலையில், மேலும், மேலும் பல்லாயிரம் ஏக்கர் நிலங்களை எதற்காக வலுக்கட்டாயமாக பறிக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பி உள்ளார்.

“விவசாயிகளின் கடும் எதிர்ப்பை மீறி, சிறிதும் மனசாட்சி இன்றி விளைந்த பயிர்களை அழித்து, விளைநிலங்களில் இரண்டாவது சுரங்கப் பணிகளைத் தொடங்கியுள்ள நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் அத்துமீறலை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்,” என சீமான் வலியுறுத்தி உள்ளார்.

அடுத்த இரு வாரங்களில் அறுவடைக்குத் தயாராக இருக்கும் நெற்பயிர்களை அழித்து, வாய்க்கால் வெட்டுகின்ற என்எல்சி இந்தியா நிறுவனத்தின் போக்கு அராஜகத்தின் உச்சம் என அதிமுக சாடியுள்ளது.

ஆயிரக்கணக்கான காவல்துறையினர் மூலம் மக்களை முடக்கி, அவர்களை மிரட்டலுக்கும் அச்சுறுத்தலுக்கும் உள்ளாக்கி, விவசாயிகளையையும், விவசாயத்தையும் அழிக்கும் என்எல்சி நிறுவனத்தின் மனிதாபிமானமற்ற செயலை வன்மையாகக் கண்டிப்பதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில், கதிர்விடும் நிலையில் உள்ள பயிர்களை அழிப்பது என்பது, குழந்தைகளைக் கருவில் கொல்வதற்கு இணையான கொடுமை எனக் குறிப்பிட்டுள்ளார்.

“இத்தகைய கொடுமைகள் உலகில் மக்களாட்சி நடைபெறும் எந்த நாட்டிலும் நடப்பதில்லை. ஆனால், விளைந்த பயிர்களை ராட்சத இயந்திரங்களைக் கொண்டு அழிக்கும் கொலைபாதகச் செயலை என்எல்சி நிறுவனம் மேற்கொண்டிருக்கிறது,” என அன்புமணி குற்றஞ்சாட்டி உள்ளார்.

இந்நிலையில், கடலூர் மாவட்டத்தில் நிலம் கையகப்படுத்தும் பணி சுமுகமாக நடைபெற்று வருவதாக என்எல்சி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்
போராட்டம்